கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்த அற்புதம்மாளை மகிழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொலைபேசி அழைப்பாக வந்து சேர்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி அற்புதம்மாளின் 23 ஆண்டு காலத் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உணர்வுமயமான மகிழ்ச்சியில் இனிப்புகளை வழங்கியும் செங்கொடியை நினைவுகூர்ந்து கண் கலங்கியும் நின்ற அவரை ஏகப்பட்ட தொலைக்காட்சி கேமிராக்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்துகொண்டனர்.

அற்புதம் அம்மாள் கடந்து வந்த 23 ஆண்டுகளின் துவக்கத்திற்குப் பெரிதும் மாறுபட்ட்து இன்றைய நிலை. உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எவரும் இந்த வழக்கில் ஆஜராவதில்லை என்ற நிலை இருந்தது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இடம் தருவதற்குக்கூட ஆதரவில்லாத ஒரு நிலை இருந்தது. பல இடங்களுக்கு மாற்றிப் பின்னர் நெடுமாறனின் இல்ல வாசலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான் நான் முதன் முதலில் அற்புதம்மாளைச் சந்தித்தேன். துயரம் தோய்ந்த அந்த முகத்தை மறக்கவே முடியாது. அது அவர் சுமந்த வலியினாலோ துயரத்தாலோ அல்ல; அதையெல்லாம் தாண்டி அவரின் வாஞ்சையும் உறுதியும் எவரையும் தொட்டுவிடும் வல்லமை படைத்தவை.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சட்ட உதவிகள்கூட மறுக்கப்பட்ட, பத்திரிகைகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்ட, ஒரு வழக்கின் இன்றைய வெற்றிக்குப் பல காரணங்கள். அதில் மிக முக்கியமான காரணம் அற்புதம் அம்மாளின் இடையராத உழைப்பும் உறுதியும். ராஜீவ் படுகொலை நிகழ்ந்த பிறகு பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிகழ்ந்த எட்டு ஆண்டுகளில் பத்திரிகைகளும் பொது மதிப்பீடுகளும் மிகவும் மோசமான எதிர் நிலையில் இருந்தன. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகம், அருணாசலம் என ஒரு சில ஆதரவு சக்திகளைக் கொண்டுதான் அவர் இப்போராட்டத்தைத் துவக்கினார்.

அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பு நாளைப் பதிவு செய்யச் சென்ற பெருங்கூட்டத்திலும் நான் இருந்தேன். 26 பேருக்கும் தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பின் அதிர்வுகள் லேசானவை அல்ல. உடனடியாகச் செய்தி கொடுக்க எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் வெளியே சில நூறு அடிகளுக்கு அப்பால் தோழர் பாலகுருவுடன் அற்புதம்மாள் இன்னும் பலர் காத்திருந்தார்கள். காரில் அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் நான் இறங்கி ஓடி பாலகுரு தோழரிடம் எல்லாருக்கும் தூக்கு கொடுத்திட்டாங்க என்று சொல்லும்போதே என்னையுமறியாமல் உடைந்து அழுதுவிட்டேன்.

ஆழ்ந்த நம்பிக்கையின்மை பிறக்கும் அந்த நிராதரவின் வெற்று வெளியிலிருந்துதான் அற்புதம்மாள் தன் பயணத்தை தொடர்ந்தார். அது அரசியல் துரோகங்களாலும் கைவிடுதல்களாலும் உரம்பெற்ற ஒரு போராளியின் பயணம். தன் மகனைக் காக்க உறுதி கொண்ட தாயின் பயணமும்தான். ஆனால் நீதியின் இரும்புக் கதவுகளைத் தட்டியே தீருவேன், கைவிட்டவர்களைப் பற்றி நினையேன், துணையென வரும் சிறு துரும்பையும் பற்றிக்கொள்வேன் என்று கிளம்பிய ஒற்றைப் பெண்ணின் நெஞ்சுரம்.

அசாத்தியமான துணிவு

உலகமே எதிர்த்து நின்ற நிலையில் தன் மகனின் மீது நம்பிக்கை வைத்த ஒரு தாயாக அவர் பேரறிவாளனுக்குத் துணை நின்றார். மாறி மாறிப் பல வழக்குகள் போட்டுத் தன் மகன் நிரபராதி என்று நிலைநிறுத்த அவர் நடத்திய போராட்டங்கள் சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருந்த ஒரு பெண்ணுக்கு அரசியல் கருத்தியல் பின்புலம் அளித்த உறுதியின் விளைவுகள். தி.மு.க. குடும்பத்தில் பிறந்து எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்த காலத்தில் ஆறாம் வகுப்புச் சிறுமியாக அவரிடம் பரிசுபெற்ற அற்புதம்மாள் தனது இறுபதாவது வயதில் குயில்தாசன் என்ற தீவிர திராவிட இயக்கப் பற்றாளரை மணந்தார்.

தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நின்றிருந்த தன் மகனுக்கு அற்புதம்மாள் கொடுத்த உறுதி மகத்தானது. பத்தொன்பதே வயதில் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஒரு பிழையான ஒப்புதல் வாக்குமூலத்தினால் தூக்கு தண்டனை பெற்று தனிமைச் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தவர் அவர் மகன். இத்தகைய ஒருவர் மனச்சோர்வும் மனச்சிதைவும் அண்டாமல் வாழ்வது மிகக் கடுமையான ஒரு போராட்டம். ஆனால் அம்மா ஒவ்வொரு வாரமும் தன் மகனைச் சந்தித்து சட்டப் பிரச்சினைகள் பற்றி மட்டுமில்லாமல் குடும்ப விஷயங்கள், ஊர் விஷயங்கள் (அவர்கள் வசித்த தெருவில் வெட்டப்பட்ட மரம் உள்பட) என எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். வன்மையாகத் துண்டாடப்பட்டுவிட்ட தன் குடும்பத்தை இணைக்கும் புள்ளியாக அவர் விளங்கினார். பேரறிவாளனை அவநம்பிக்கையின் பிடியிலிருந்து விடுவித்திருக்கிறார்.

பெருத்த நிராதரவைச் சாதகமான சூழலாக மாற்றியதில் பல அரசியல் காரணிகள் இருக்கின்றன. ஈழத்தில் கொடூரமாக நடந்து முடிந்த போர், அதையொட்டித் தமிழக மக்களின் எழுச்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆகியவை முக்கியமானவை. ஆனால் பேரறிவாளனின் நினைவைப் பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் மறக்க முடியாத சுடராகக் காபாற்றிவந்த அற்புதம்மாளின் அரசியல் பங்கெடுப்புகள் இவை அனைத்தையும்விட முக்கியமானவை. அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காத அறத்தோடும் உணர்ச்சிகளால் தத்தளித்த தாயின் நெஞ்சோடும்

அவர் சட்ட வழிமுறைகளை அயராமல் பயன்படுத்தினார். மரண தண்டனை எதிர்ப்புக்காகவும் சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காகவும் செயல்பட ஏதுவான அனைத்துத் தளங்களிலும், அவற்றைக் கடந்தும் அவரது செயல்பாடுகள் அமைந்தன. எதிர்க் கருத்துள்ள காவல்துறை, நீதித்துறையினரிடம்கூடத் தன் மகன் தரப்பு நியாயத்தை அவர் பிரச்சாரப்படுத்தினார்.

தீவிர அரசியலில் ஈடுபடுபவர்களை அரசுகள் சிறைபடுத்தும்போதும் அவர்களுக்குத் தீவிர தண்டனைகளைச் சில வேலைகளில் நீதிமன்றங்கள் வழங்கும்போதும் அவர்களின் குடும்பங்கள், குறிப்பாகப் பெண்கள், அதற்கென எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் அவமானங்களும் உழைப்பும் பொருட்செலவும் அமைப்புகளின் வரலாறுகளில் பெரும்பாலும் பதியப்படுவதில்லை. அற்புதம்மாளின் 23 ஆண்டு கால வாழ்க்கையின் பதிவுகள்தான் தமிழகத்தில் இதற்கான முதல் ஆதாரம். குடும்பத்தைப் பாதுகாப்பது என்ற எளிய வரையறைக்குள் பெண்கள் பல நெருக்கடி நேரங்களில் ஆற்றிவரும் அளப்பரிய அரசியல் பணிகளின் ஆழமான வெளிப்பாடாகவே அற்புதம்மாள் இருக்கிறார். அதுவே அவரை வரலாற்றின் பக்கங்களில் நிலைநிறுத்துவதாகவும் இருக்கிறது.

Leave a Reply