shadow

wa_2508803h

“ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?” என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலே நம்மை இணைத்துக் கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் இணைந்தே இருக்கிறோம். புற்றீசல் கணக்காய்ப் பெருகிக் கிடக்கும் குழுக்கள் பலவற்றில் இருந்து ஏராளமான செய்திகள் குப்பைகளாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம்.

சட்ட அமலாக்க மையங்களும், சைபர் சட்ட வல்லுனர் குழுக்களும், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இணையக் குற்றம் தொடர்பான சட்டங்கள் தெளிவற்றதாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதனாலேயே ஒரு செய்திக்கான பொறுப்பும் முக்கியத்துவமும் மறுக்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் குறித்து சில வழக்குகளே பதியப்படுகின்றன. இவற்றைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமலேயே, தொழில்நுட்பம் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதா? இதோ, நிபுணர்கள் விக்கி ஷா மற்றும் விஜய் முகிஆகியோர் அளித்த விளக்கங்களின் சுருக்கமான வடிவம்:

ஏன் எப்பொழுதும் கடைசியில் அட்மின்களே பலிகடா ஆக வேண்டியிருக்கிறது?

விஜய்: பெரும்பாலான இணைய குற்றவியல் வழக்குகளில், சர்ச்சைக்குரிய பதிவுகள் எங்கே உருவாகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. அந்த குறிப்பிட்ட செய்தி பரவிய வாட்ஸப் குழுவின் உறுப்பினர்களின் செயலுக்கு, வாட்ஸ் அப் நிர்வாகியே பொறுப்பேற்க வேண்டியதாகிறது. அதே சமயம் உறுப்பினர்களால் பதியப்படும்/ பகிரப்படும் கருத்துகளையும், பேச்சுக்களையும் படங்களையும் கட்டுப்படுத்தும் முழுப்பொறுப்பும் நிர்வாகியுடையதே என்பதை மறக்கக்கூடாது.

விக்கி: இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். தனிநபர் ஒருவரால் பகிரப்படும் கருத்துக்கு, குழுவின் நிர்வாகி பொறுப்பேற்க முடியாது. ஃபேஸ்புக் குழுக்களைப் போல், தனிநபரின் பதிவு எல்லையைக் கட்டுப்படுத்தும் வசதிகள் வாட்ஸ் அப்பில் இருப்பதில்லை. சம்பந்தப்பட்ட தனிநபர் சார்ந்தே அதைப் பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 66- A பிரிவுக்கு பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு பின்வரும் கூற்றுகளை முன்னெடுக்கிறது.

1. சமூக ஊடகங்களில் நடக்கும் குற்றங்களின் தன்மைக்கேற்ப விசாரணை மற்றும் தண்டனை முறைகள் மாறும்.

2. பதியப்பட்ட பதிவு / கருத்துக்களைப் பொறுத்து, அது இந்திய தண்டனைச் சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு உட்பட்டதா என்று முடிவு செய்யப்படும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்ற குழுக்களில் இருந்தோ, மற்றொருவரிடம் இருந்தோ நமக்குப் பகிரப்பட்டால் என்ன செய்வது?

விக்கி: மற்றவர்கள் மூலம் ஒரு தகவலைப் பெறுவது குற்றமாகாது. ஆனால் ஒருவர், தகவலின் உண்மைத்தன்மையை அறியாமல், அதனை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ, காண்பித்தாலோ அது குற்றமாகும். தவறான செய்தியைப் பகிர்வதன் மூலம் சம்பந்தப்பட்டவருக்குத் தவறிழைத்தாலோ, இழப்பை ஏற்படுத்தினாலோ, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

“குறிப்பிட்ட செய்தி, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை” என்று கூறினால் என்ன நடக்கும்?

விஜய்: அது மேலும் கெடுதலையே விளைவிக்கும். ஒரு மதுக்கடை நிர்வாகி போலியான மதுபானத்தைத் தன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து, அதனால் யாராவது இறந்து போனால், நிர்வாகியே இறப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். வெறுமனே மது உற்பத்தியாளர் மீது குற்றம் சுமத்த முடியாது. அதுபோலத்தான் இங்கேயும்.

விக்கி: சட்டத்தின் முன்னால் ஒருவர், ‘அறியாமையால் இதைச் செய்தேன்’ என்று சொல்ல முடியாது. ‘எனக்கு வந்ததை அப்படியே பகிர்ந்தேன்’ என்றும் கூறமுடியாது. முடிவில் விசாரணை செய்யும் அதிகாரியே யாரைக் கைது செய்யவேண்டும் என்று முடிவு செய்வார்.

காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

விக்கி: கிடைத்திருக்கும் தகவலை வைத்துக்கொண்டு, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள். புகார் கொடுப்பவர்களோ அல்லது தவறான தகவலால் பாதிக்கப்பட்டவர்களோ முதல் சாட்சியாகக் கருதப்படுவார்கள். வாட்ஸ் அப் தகவலின் உள்ளடக்கத்தின் தன்மையைப் பொறுத்து, மற்றவர்களும் புகார் கொடுக்க முடியும்.

விக்கி: வாட்ஸ் அப் குழு நிர்வாகி, இந்தியர் அல்லாதவராக இருக்கும்பட்சத்தில் கூட, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

Leave a Reply