ரஜினிக்கு ஒரு பாட்ஷா, கமலுக்கு ஒரு நாயகன் , விஜய்க்கு ஒரு போக்கிரி மாதிரி சூர்யாவுக்கு ஒரு அஞ்சான் கேங்ஸ்டார் படம் கொடுக்க முயற்சித்த லிங்குசாமி படத்தை “லத்திகா” அளவுக்கு கொடுக்காமல் சூர்யாவையும், அவரது ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளார். லிங்குசாமியின் திரையுலக வரலாற்றில் ‘ஜீ’ படம்தான் மோசம் என்று நாம் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பதை தனது ‘அஞ்சான்’ படத்தின் மூலம் மாற்றியிருக்கிறார். டிரைலரின் வெற்றிக்கே விழா வைத்து பில்டப் செய்யும்போதே தெரிந்து விட்டது இது ஒரு மொக்கை படம் என்று,. அது இன்று உறுதியாகியும் விட்டது.
சூர்யா-வித்யூத் இருவரும் கேங்ஸ்டார் நண்பர்கள். எதிர்கோஷ்டி தலைவன் ஒருவன் நண்பன் வித்யூத்தை கொலை செய்ய இதனால் ஆத்திரப்படும் சூர்யா, அவனை கொலை செய்வதற்காக ஆவேசமாக காரில் தனது கூட்டாளியுடன் போகிறார். அப்போது திடீரென கார் ஒரு பாலத்தில் நிற்கிறது. சூர்யாவின் கூட்டாளியே சூர்யாவை துப்பாக்கியால் சுட, சூர்யா பாலத்தில் இருந்து கிழே தண்ணீரில் குதிக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில், தண்ணீரில் விழுந்த எந்த கதாநாயகனாவது இறந்ததுண்டா?
மீண்டும் சூர்யா வேறு வேடத்தில் வந்து பகைவர்களை பழிவாங்குகிறார். இதற்கிடையே சமந்தாவிடம் மோதல், காதல். இடையிடையே எல்.கே.ஜி. குழந்தைகூட ஊகித்துவிடும் டுவிஸ்ட். இதுதான் இந்த படத்தின் கதை.
கேங்ஸ்டார் வேடத்திற்கு சூர்யா சிறிது கூட பொருந்தவில்லை. சின்னப்பையனிடம் துப்பாக்கியை கொடுத்து விளையாட சொன்னதுபோல் இருக்கின்றது. சூர்யா தன் கண்களில் காட்டும் ஆக்ரோஷம், உயிரைக்கொடுத்து வரவழைத்த நடிப்பு எல்லாமே வேஸ்ட். அதுவும் இவர் பஞ்ச் டயலாக் பேசும்போது படு எரிச்சலாக இருக்கின்றது. சாரி சூர்யா. பெட்டர் லக் டு நெக்ஸ்ட் டைம்.
படத்தின் ஒரே ஆறுதல் சமந்தா. பாடல் காட்சியில் அவர் அள்ளி தெளித்திருக்கும் கவர்ச்சிக்கே ஒரு கூட்டம் வரும். யுவன்ஷங்கரின் சுமாரான பாடலை கூட பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் உட்கார்ந்திருந்தார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் சமந்தாதான்.
அனைத்து படங்களிலும் அசத்தும் சந்தோஷ்சிவன் கூட இதில் ஏமாற்றியிருக்கிறார். இளையதலைமுறை இயக்குனர்கள் எல்லாம் வித்தியாசமாக சிந்தித்து படம் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் துப்பாக்கி, பம்பாய், வில்லன், நண்பன், துரோகி என்று அரதப்பழசான கதையை லிங்குசாமி- சூர்யா ஜோடி தேர்வு செய்துள்ளதை நினைத்து நாம்தாம் நொந்துகொள்ள வேண்டும். திரைக்கதை படு சொதப்பல். இதே கதையை ஹரியிடம் கொடுத்திருந்தால் செம விறுவிறுப்பான ஒரு படத்தை கண்டிப்பாக கொடுத்திருப்பார்.
அஞ்சான். நோஞ்சான்.