மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழைகாரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று குயின்ஸ்டவுனில் நடந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் 21 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசி ரைடர் சதமடித்தார். இந்நிலையில் 5வது வீரராக களமிறங்கிய கோரி ஆண்டர்சன், தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக வெறும் 36 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். இதற்கு முன்பு 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடீ 37 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்துவந்தது. 21 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது.
பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய மேற்கிந்திய அணி 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் பிராவோ மட்டும் சற்று நிலைத்து ஆடி 56 ரன்கள் எடுத்தார்.
159 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.