அவசர உதவிக்கு 108! உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் ‘சேவை

சாலையில் அலறும் ஆம்புலன்ஸின் அலெர்ட் ஒலியைக் கேட்டால்… வண்டிகள் சட்டென ஒதுங்கி வழிவிடும். ‘யாருக்கு… என்ன நடந்ததோ?’ என்ற கவலையும், பதட்டமும் பயணிப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும்.

விலைமதிப்பில்லாத உயிரைக் காக்க ஜெட் வேகத்தில் பறக்கும் ஆம்புலன்ஸின் செயல்பாடுகள் குறித்த விவரத்தை அறிய, 108-க்கு போன் செய்தோம்.

மறுமுனையில் மணி ஒலிப்பதற்கு முன்பே, ‘வணக்கம்.. 108!’ என்ற குரல் கேட்டது. இந்தக் குரல்தான், 108 என்ற எண்ணை அழைக்கும் அனைவருக்கும், ‘நாங்க இருக்கோம்’ என்று தெம்பூட்டுகிறது. சேவை நோக்குடன் செயல்படும் 108, அவசர மருத்துவ உதவிக்காக மட்டுமின்றி, காவல் துறை மற்றும் தீ அணைப்பு உதவிக்கும் மக்கள் மனதில் பதிந்துபோன எண்.

சென்னை திருவல்லிக்கேணியில், கஸ்தூரிபா அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், ‘108’ அவசரசிகிச்சை மையத்தை நிர்வகிக்கும், ஈ.எம்.ஆர்.ஐ.  (Emergency Management and Research Institute) & GVK அலுவலகம் இயங்குகிறது. அரசும் தனியார் நிறுவனமும் இணைந்து நிர்வகிக்கும் இதன் ஓர் அங்கமான ‘108’ ஆம்புலன்ஸ் சேவை, குறுகிய காலத்தில் மிகப் பெரிய ‘மாஸ் ஹிட்’ சேவை எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த அலுவலகத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸைச் சந்தித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கேட்டோம்.

‘எந்த நேரத்தில் உங்களின் சேவை அதிகம் தேவைப்படுகிறது?’

” ‘பீக் அவர்’ என்னும் உச்சக்கட்ட நேரமான தினமும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை. அதைத் தவிர, வாரக் கடைசி நாட்கள், தீபாவளி, புத்தாண்டு, காணும் பொங்கல் போன்ற எல்லாப் பண்டிகைத் தினங்களும் எங்களுக்கு ‘பீக் டேஸ்’தான். ‘பீக் மன்த்’ என்று பார்த்தால், கோடை விடுமுறை மாதமான மே மாதம்தான். ஏனெனில் இந்த மாதத்தில்தான் பயணங்கள் நிறைய என்பதால், விபத்துக்களும் அதிகம் இருக்கும்.”

‘பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்ஸில் ஏற்றியவுடன் என்ன முதலுதவி அளிக்கப்படுகிறது?’

‘எங்களுக்கு அழைப்பு வந்ததுமே, அது எங்கிருந்து வந்தது என்று பார்த்து, அதற்கு அருகில் இருக்கும் வண்டியை அனுப்புகிறோம். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் பயிற்சி பெற்ற மெடிக்கல் டெக்னீஷியன்கள், பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலை, சர்க்கரை, சுவாசம் ஆகியவற்றைப் பரிசோதிப்பார்கள். தேவைப்பட்டால் உடனே சலைன் ஏற்றப்படும். நோயாளியின் நிலைமை குறித்து, 108 அலுவலகத்தில் இருக்கும் டாக்டரிடம் தொலைபேசியில் தெரிவிப்பர்.டாக்டரின் வழிகாட்டுதலின்படி, நோயாளிக்கு முதல் உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும்.’

‘எந்த மாதிரி அழைப்புகள் வருகின்றன?’

‘மருத்துவ உதவி மட்டுமல்லாமல், இறந்தவர்களின் கண் தானத்துக்கு உதவி கேட்பார்கள். அருகே இருக்கும் மருத்துவமனையிலிருந்து வந்து கார்னியாவை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்வோம். திடீர் வெள்ளம், ஈவ்டீசிங் பிரச்னை போன்றவற்றுக்குக் கூட எங்களை அழைக்கலாம். சில மாதங்கள் முன்பு, திருநெல்வேலியில் ஒரு பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, 108-க்கு சிலர் தகவல் தர, ஆம்புலன்ஸ் போய் அந்தப் பெண்ணை மீட்டு, போலீஸுக்கும் தகவல் கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.”

‘ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்று அட்மிட் செய்வதோடு, உங்கள் வேலை முடிந்துவிடுகிறதா? ஃபாலோஅப் உண்டா?’

‘அட்மிஷன் செய்த 48 மணி நேரத்துக்குப் பிறகு, அந்த நோயாளி எப்படி இருக்கிறார், என்ன சிகிச்சை தரப்படுகிறது என்கிற தகவல்கள் சேகரிக்கப்படும். அது மட்டுமின்றி, அட்மிட் செய்யப்பட்ட நோயாளி பற்றிய ரெக்கார்டுகள் பாதுகாக்கப்படும். இதற்கென, தனியாக ‘ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ்’ பிரிவு இருக்கிறது.’ என்று பிரபுதாஸ் முடிக்க, அலறும்  தொலைபேசியை எடுத்த அங்கிருந்தவர், ”வணக்கம் 108” என்றபடியே விவரங்கள் கேட்க… மறுநொடியில்…

‘ஊய்ங்… உய்ங்…’ என்ற சைரன் ஒலியுடன், அம்பு போல ‘விர்’ரெனப் புறப்படுகிறது 108 ஆம்புலன்ஸ்!

Leave a Reply

Your email address will not be published.