ஆல்பர்ட் ஃவெர்ட் (Albert Fert) (பி. மார்ச் 7 1938) ஒரு பிரெஞ்ச்சு இயற்பியலாளர். இவரும் ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg) என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தற்பொழுது பிரான்சில் ஆர்சே (Orsay) என்னுமிடத்தில் உள்ள தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ப்ணியாற்றுகிறார். பிரெஞ்ச்சு நாட்டு நடுவண் அறிவியல் ஆய்வகமும் தாலெ குழு (Thales Group) என்னும் நுண்மின்கருவி தொழிலகமும் இணைந்து நடத்தும் ஓர் ஆய்வகத்தின் இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.

ஃவெர்ட் 1962ல் பிரான்சில், பாரிசில் உள்ள ஈக்கோலே நோர்மாலெ சுப்பீரியெர் (École normale supérieure) பயின்று பட்டம் பெற்றார். பின்னர் 1963ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1970ல் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (Université Paris-Sud) முனைவர் ஆய்வுப்பட்டம் (பி. ஹெச். டி) பெற்றார்.

1988ல் ஃவெர்ட் முதன்முதலாக மாபெரும் காந்தமின்தடைமம் விளைவைக் கண்டுபிடித்தார். இவ்விளைவு மெல்லிய படலமாய் இரும்பும் குரோமியமும் மாறிமாறி அமைந்த பல்லடுக்குப் படலத்தில் காந்தப்புலம் செலுத்தினால் மின் தடைமம் மிகுதியும் குறைந்துவிடும் விளைவாகும். இவ்விளைவை இதே காலத்தில் ஜெர்மனியில் பீட்டர் குருன்பெர்க் தன்னாய்வுகளின் பயனாய் கண்டுபிடித்தார்.

Leave a Reply