திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலருமான மு.க. அழகிரி சனிக்கிழமை இரவு திருப்பதிக்கு தனது குடும்பத்தினர்களுடன் ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தார். நேற்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கிளம்பினர். ஆனால் மு.க.அழகிரி சுவாமி தரிசனம் செய்ய வராமல் அறையிலேயே தங்கியிருக்க போவதாக முடிவு செய்துவிட்டு, குடும்பத்தினர்களை மட்டும் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டாராம்.

அதன்படி முதலில் திருக்குளத்திற்கு சென்ற அழகிரி குடும்பத்தினர் குளத்தில் குளித்துவிட்டு, குளத்தின் அருகில் இருந்த வராஹ சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் வி.ஐ.பி தரிசனம் மூலம் ஏழுமலையான தரிசித்துவிட்டு லட்டு வாங்கிவிட்டு வந்தனர். இந்த தரிசனம் முடிந்தவுடன் நேற்று இரவு அவர்கள் மதுரைக்கு கிளம்பி சென்றனர்.

திருப்பதி வரை குடும்பத்துடன் வந்துவிட்டு ஏழுமலையானை தரிசிக்காமல் அறையிலேயே அழகிரி இருந்தது ஏன் என்ற மர்மம் அவருடன் வந்த அவரது உதவியாளர்களுக்கே விளங்கவில்லையாம். சென்ற மாதம் ஸ்டாலின் மகன் உதயநிதி பழநி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததை இணையதளங்கள் கேலியாக செய்தி வெளியிட்டிருந்ததால் தனது தந்தையின் பகுத்தறிவு கொள்கைக்காக அவர் சுவாமி தரிசனம் செய்யாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply