நடிகர் அஜீத்தின் வீடு, சென்னை திருவான்மியூர், சீ வேர்டு சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில், 2 மர்ம வாலிபர்கள், அஜீத்தின் வீட்டு முன்பக்க இரும்பு கதவை தட்டினார்கள்.

நாங்கள் தலய (அஜீத்) பார்க்கணும், அவரை பார்த்து பேச வந்தோம், என்று சத்தம் போட்டு கலாட்டா செய்தார்கள். வீட்டு காவலாளி, அந்த வாலிபர்களிடம், அஜீத், வெளியில் சென்றுள்ளார். பகலில் வாருங்கள் என்று பதில் அளித்தார்.

ஆனால், அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததால், சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ரகளை செய்தனர்.

அந்த நேரம் பார்த்து வெளியில் சென்றிருந்த நடிகர் அஜீத் காரில் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரகளை செய்த ஆசாமிகள் உற்சாகமாகிவிட்டனர். தல வந்துட்டார், தல வந்துட்டார், என்று சந்தோஷ கூச்சலிட்டபடியே, அஜீத்தின் காருக்கு பின்னால், வீட்டுக்குள் ஓடினார்கள். காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அஜீத் காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் போய்விட்டார்.

இதற்கிடையில், இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரையும், திருவான்மியூர் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர். பிடிபட்ட வாலிபர்கள், தாங்கள் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் என்றும், அவரை பார்ப்பதற்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் பெயர் கண்ணன் (வயது 29), இன்னொருவர் பெயர் வெற்றி (31). இருவரும் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள். போதையில் இருந்ததால், அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் தப்பான நோக்கத்தில் அஜீத் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிய வந்ததாலும், அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படாததாலும், எச்சரித்து விடுவித்து விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply