shadow

agathiyarஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர் குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.

 பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

 

தியானச் செய்யுள்

 

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே

சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே

கடலுண்ட காருண்யரே

கும்பமுனி குருவே சரணம் சரணம்

 

காலம்

 

அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாள் ஆகும். (அகத்தியர் வாழ்க்கை வரலாறு முற்றும்)

Leave a Reply