shadow

அதிமுக வெற்றி பெறுவதற்காகவே 5 கட்சி கூட்டணியை வைகோ ஏற்படுத்தியுள்ளார். சோமு அதிர்ச்சி தகவல்
somu
திமுகவை தோற்கடிக்கவும், அதிமுக வெற்றி பெறுவதற்காகவும்தான் வைகோ ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார். எனவே அவருடைய போக்கு பிடிக்காமல் நாங்கள் மதிமுகவில் இருந்து விலகி வந்துவிட்டோம் என நேற்று திமுகவில் இணைந்த ம.தி.மு.க. தலைமை உயர்நிலைக்குழு உறுப்பினரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான பாலவாக்கம் சோமு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

நேற்று தனது குடும்பத்துடனும் ஆதரவாளர்களுடனும் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த சோமு, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தனது மனைவி வசந்தி, மகன் பிரபாகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பவர் பேசியபோது ”கடந்த 2 மாதங்களுக்கு முன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசை வீழ்த்த, தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதனை வைகோ ஏற்றுக் கொண்டு, தக்க தருணத்தில் அறிவிப்பேன் என்றார்.

ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில், 5 கட்சிகளுடன் தான் கூட்டணி என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் சூரியன் உதிக்கும் திசை மாறினாலும் என் முடிவில் மாற்றம் இல்லை என்றும் வைகோ கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 கட்சிகளுடன் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடுமே என்று நான் கேட்டபோது, அ.தி.மு.க. வெற்றி பெறட்டும். தி.மு.க.வைவிட அ.தி.மு.க.வே மேல் என்று வைகோ கூறினார்.

இந்த பேச்சு என்னை போன்றவர்களை வெறுப்பு அடைய செய்தது. மேலும் அவர், தி.மு.க. தோல்வியடைய வேண்டும் என்று கூறியதால், அவரிடம் இருந்து இன்று விலகி வந்துவிட்டேன். வைகோவை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு எதிராகவே முடிவு எடுப்பார். என்னை போன்றவர்கள் இதை வெகு நாட்களாக அறியாமல் இருந்து விட்டோம். ஆதனால், நான் ம.தி.மு.க.வில் இருந்து விலகி என் குடும்பத்துடன் தி.மு.க.வில் இணைந்து இருக்கிறேன்.

வரும் நாட்களில் என்னைப்போல் தி.மு.க.வில் பலரும் இணைவார்கள். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பலரும் வைகோ மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களும் தி.மு.க.வில் விரைவில் இணைவார்கள். 1993 ஆம் ஆண்டில் வைகோ தி.மு.க.வைவிட்டு விலகியபோது, என்னை அறியாமல் நானும், தவறாக முடிவு எடுத்து சென்றுவிட்டேன். ஆனால், இன்றைக்கு என்னை தாய் உள்ளத்துடன், தி.மு.க. தலைவர் கருணாநிதி அரவணைத்திருக்கிறார்” என்றார்.

ம.தி.மு.க.வின் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் ஏற்கனவே விலகிச் சென்றுள்ள நிலையில், வைகோவின் தீவிர விசுவாசியாக கருதப்படும் பாலவாக்கம் சோமுவும் தற்போது ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்திருப்பது ம.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply