தனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷின் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வி.ஐ.பி-2’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வி.ஐ.பி-2ஆம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான கதை, வசனத்தை நடிகர் தனுஷே எழுத, படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், 2ஆம் பாகத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மேலும் முதல் பாகத்தில் நடித்த அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் இந்த இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி முக்கிய வேடம் ஒன்றில் நடிகை கஜோல் நடித்துள்ளார். இதற்கு முன்னர் நடிகை கஜோல் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைப்புலி எஸ்.தாணு இணைந்து தயாரித்துள்ள வி.ஐ.பி-2 படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வரும் ஜூலை 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.