டெல்லியில், ‘ஆம் ஆத்மி’ ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. கவர்னருக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியது.

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில், பா.ஜனதா கூட்டணி 32 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பா.ஜனதாவுடன் கவர்னர் நஜீவ் ஜங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போதிய மெஜாரிட்டி பலம் இல்லாததால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பா.ஜனதா மறுத்துவிட்டது.

இதையடுத்து, ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கெஜ்ரிவால் இன்று கவர்னரை சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே, வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமாறு யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை பரிசீலனையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக கவர்னர் நஜீப் ஜங்குக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஜே.பி.அகர்வால் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஆம் ஆத்மி, ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். டெல்லி மக்களுக்கு ஒரு அரசு தேவை. எனவே, அரசு அமைப்பது ஆம் ஆத்மியின் கடமை என்று அவர் கூறினார்.

டெல்லியில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆம் ஆத்மியின் 28 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால், 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்து விடுகிறது. எனவே, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரசு அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ‘ஆம் ஆத்மி’ ஏற்க மறுத்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவரும், பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷண் கூறியதாவது, யாரிடமும் ஆதரவு கேட்பது, ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, அந்த ஆதரவை ஏற்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply