ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது. இந்த மசோதாவால் ஊழலை தடுக்க முடியாது. ஆனால் அதற்கு பதில் ஊழலை பாதுகாக்கும் வேலைகளை செய்யும். இந்த லோக்பால் சட்டத்தை வைத்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு தண்டனை கூட வழங்க முடியாது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மந்திரிகளை மறந்துவிடுங்கள், ஒரு எலி கூட சிறைக்கு போகாது. இந்த லோக்பால் மசோதாவால் யாருக்கு லாபம் என்று எண்ணிப்பார்த்தேன். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தான் இதன் வழியில் சில பலன்களை அடைவார்.

சி.பி.ஐ. கடந்து வந்த 50 ஆண்டுகளில் 4 அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் அறிக்கை கொடுக்கும் அதே அரசியல் முதலாளிகளுக்கு எதிராகவே வழக்கு விசாரணை நடத்துவது தான். சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தான், பிரதம மந்திரி கூட 2ஜி வழக்கிலோ, நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கிலோ சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம்.

எனவே நாம் எப்படி இந்த பலவீனமான லோக்பாலை ஏற்றுக்கொள்ள முடியும். நாங்கள் ஜன லோக்பாலுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தடுப்பதற்காக தனது 3 உறுதிகளை காக்க பாராளுமன்றம் தவறிவிட்டது. இந்த லோக்பாலை ஆதரிக்கும் நிலையை அன்னா ஹசாரே எடுத்தது வருத்தமடைய செய்கிறது.

ஊழலை அவர்கள் தவணை முறையில் செய்யாதபோது, இந்த சட்டத்தை மட்டும் ஏன் தவணை முறையில் வழங்க நினைக்கிறார்கள். இது என்ன சில்லறை விற்பனை கடையா? அவர்கள் ஏன் ஒரே முறையில் கடுமையான சட்டத்தை கொண்டுவரக் கூடாது.

டெல்லியில் அரசு அமைக்க நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம். அரசியல் விளையாட்டுகளை விட்டுவிட்டு அவர்கள் உரிய பதிலை அளிக்க முன்வர வேண்டும். பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தயார் என்றால் அனைத்து பிரச்சனைகளும் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும்.

அந்த கட்சிகள் பதில் கொடுத்த பின்னர் அதனை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அரசு அமைக்கலாமா? என மக்கள் கருத்துகளை கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும். இதற்காக அனைத்து வார்டுகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply