டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைத்தார். ஆனால் இதற்கு பா.ஜனதா மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அக்கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லி மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே, ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தார். இது தொடர்பாக 25 லட்சம் கடித நகல்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான பதில்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லியில் ஆட்சியமைக்க எந்த கட்சியும் முன் வராததால், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

இந்தநிலையில் நேற்று டெல்லியில் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, “டெல்லியில் அரசு அமைக்க ஆம் ஆத்மி கட்சி எத்தனை நாள் அவகாசம் கேட்டுள்ளது? என துணைநிலை ஆளுநரிடம் மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், புதிய அரசு அமைக்க அக்கட்சிக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்” என்றும் கூறினார். மேலும் இது ஜனநாயக நடைமுறை என்று கூறிய அவர், மாநிலத்தை வெற்றிடமாக விட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு அவரசம் காட்டாது என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply