ஆதார் இருந்தால்தான் ஆம்புலன்ஸ்! உபி அரசின் அதிரடி உத்தரவு
ஒருவருக்கு திடீரென மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் அத்தியாவசிய தேவையை கூட நோயாளியின் உறவினர்கள் பதட்டத்தில் மறந்துவிடுவதுண்டு. ஆனால் நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த வேண்டுமானால் ஆதார் அட்டை அவசியம் என உபி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உபி கிராம மக்கள் கூறும்போது, ‘ஆதார் கார்டு இல்லாத கிராம மக்கள் பல கோடி பேர் இன்னும் கிராமங்களில் உள்ளனர். இந்த உத்தரவு சாதாரண அடித்தட்டு மக்களைக் கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, அவசரமாக ஆம்புலன்ஸை அழைக்கும்போது ஆதார் கார்டை தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று புலம்புகின்றனர்.
ஆனால் இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘“அரசின் சேவையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஓட்டுநர் பல நேரங்களில் பொய் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றுவிடுகிறார். பொய்கணக்கு சொல்லி எரிபொருள் கட்டணம் பெறுகிறார்கள். நண்பர்களை வைத்து ஆம்புலன்ஸ் தேவை என்று பொய்யாக கால் செய்கிறார்கள். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதன் மூலம் உண்மையாக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோருக்கு சேவை சென்றடையும்” என்று விளக்கம் அளித்தனர்.