மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பை சேர்ந்தவர் சித்தன். இவர் கிரிவலப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர் சித்தனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது வழிப்பறியில் ஈடுபட்டது ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் வெங்கடேஷ் (வயது 32), சதீஷ்குமார் (31) என தெரியவந்தது. மதுரை நகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருந்த வெங்கடேஷ், பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான சதீஷ்குமார், மதுரை மாவட்டம் வாலாந்தூர் நாட்டா பட்டியை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றிய இவர் மீது பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. புகார்களின் அடிப்படையில் சதீஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட இரு போலீஸ்காரர்களும் வழிப்பறியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.