shadow

அருள்நிதி படத்தை தடை செய்ய வழக்கு. திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

arul nidhiடிமாண்டி காலனி’ வெற்றி படத்திற்கு பின்னர் அருள்நிதி நடித்த “ நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்” என்ற திரைப்படம் முதலில் வரும் 31ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என திடீரென வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி வரும் 24ஆம் தேதி வெளிவருமா? என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்த “ நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்”. என்ற படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று எம்.எஸ்.கே. பிலிம் நிறுவனர் நாகராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “லியோ விஷன் நிறுவனத்தின் உரிமையாளரான ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை என்னுடைய நிறுவனமான எம்.எஸ்.கே.பிலிம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 9ம் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டு வினியோக உரிமைக்காக 21 லட்சம் நான் கொடுக்க வேண்டும்.

அதன் படி, 7 லட்சம் ரூபாயை முன் தொகையாக ஏற்கெனவே கொடுத்துவிட்டேன். மீதி தொகையை படம் வெளியாவதற்கு 3 நாட்கள் முன்னர் வழங்க வேண்டும். இந்த நிலையில் படத்தின் தயாரிப்புகள் முடிந்து வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் விளம்பரம் செய்துள்ளார்.

இதையடுத்து பலமுறை அந்த தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் பேசவில்லை. என்னிடம் முன்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்காமல் உள்ளனர். எனவே, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுக்கான வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். வியாழக்கிழமை வெளியாகும் தீர்ப்பை பொருத்துதான் இந்த படம் வெள்ளியன்று ரிலீஸாகுமா? இல்லையா ? என்பது தெரியவரும்

Leave a Reply