சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8 ஆம் தேதி அன்று நடந்த வாகன விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
40 வருடங்களில் மிக மோசமான இந்த வன்முறையில், 16 காவல்துறை வாகனங்களும், 25 பொதுவான வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 39 காவல்துறையினர் வன்முறையாளர்களின் கல்வீச்சில் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலவரப்பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 பேரை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்தது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்.
அதன்படி, கலவரம் காரணமாக 52 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.