shadow

49ஓ திரைவிமர்சனம்
49 O'
பல வருடங்களுக்கு பின்னர் கவுண்டமணி ரீஎண்ட்ரி ஆகியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களை கவுண்டமணியும், அறிமுக இயக்குனர் ஆரோக்கியதாஸும் ஏமாற்றவில்லை என்பது பெரிய ஆறுதல். ரஜினி, அஜீத், விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் நடிக்கவேண்டிய அழுத்தமான சப்ஜெக்ட். ஆனால் இவர்கள் நடித்திருந்தால் இந்த படம் வெளியே வருமா? என்பது சந்தேகம். அந்த அளவுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேர்தல் ஆணையம், என அனைத்தையும் தனது ஆரோக்கியமான வசனங்களால் விளாசி தள்ளியுள்ளார் ஆரோக்கியதாஸ்.

விவசாயம் செய்து பிழைப்பு நடத்தும் கிராமம் ஒன்றில் வழியே தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையம் வருவதை முன்கூட்டியே அறிந்த கொண்ட அந்த ஊரின் எம்.எல்.ஏவின் மகன், விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி ஒரு சிறிய தொகையை மட்டும் கொடுத்துவிட்டு நிலங்களை எழுதி வாங்கி கொள்கிறார். மீதி பணத்தை கேட்டு போன விவசாயிகளை அடித்து விரட்டும்போதுதான், தாங்கள் எம்.எல்.ஏவின் மகனால் ஏமாற்றப்பட்ட விஷயம் விவசாயிகளுக்கு தெரிய வருகிறது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த விவசாயி கவுண்டமணி, ஏமாந்த விவசாயிகளின் நிலத்தை எம்.எல்.ஏவின் மகனிடம் இருந்து எப்படி மீட்டு தருகிறார் என்பதுதான்கதை.

கவுண்டமணியின் உடல் கொஞ்சம் மாறியிருந்தாலும் வசன உச்சரிப்பில் இருக்கும் எகத்தாளம் அப்படியே இருக்கின்றது. இந்த வயதிலும் கணீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் மனதில் பதிகிறது. ஆனால் டான்ஸ் ஆடுவதைத்தான் சகித்து கொள்ள முடியவில்லை.

கவுண்டமணியை தவிர இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி யாரும் இந்த படத்தில் இல்லை என்பதால் அவர் ஒருவரே படத்தின் பாரம் முழுவதையும் தனது தலையில் ஏற்றி கொள்கிறார். ஹீரோயின் இல்லை, டூயட் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, படத்தை மொத்தமாக தூக்கி நிறுத்துவது இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மட்டுமே. 49ஓ-வுக்கு இயக்குனர் கொடுத்துள்ள விளக்கம், ஒரு தேர்தலில் வேட்பாளர்களை விட நோட்டோ அதிக வாக்குகள் பெற்றால் வேட்பாளர்களுக்கு தண்டனை ஆகிய புதுமையான எண்ணங்கள் ரசிக்கும்படி உள்ளது.

விளம்பரப்படம் எடுக்கும் இயக்குனராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலாசிங் மற்றும் ஒருசில நடிகர்களின் நடிப்பு ஓகே. இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஆதி கருப்பையா ஆகியோர்களின் பணியும் நன்றாக உள்ளது. அறிமுக இயக்குனர் ஆரோக்கியதாஸ், நல்ல கதையம்சத்துடன் கொண்ட படத்தை கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்

மொத்தத்தில் 49ஓ படத்தை ஓஹோ என்று சொல்லலாம்.

Leave a Reply