shadow

42 வயது ஆண் கருவுற்றாரா? அசாம் மாநிலத்தில் பரபரப்பு

அசாம் மாநிலத்தில் ஆண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நடத்திய மருத்துவப் பரிசோதனையில் அவர் கருவுற்றிருப்பதாக முடிவு வந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாத சூழலில், தனியார் மூலம் இலவசப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அசாமின் பல பகுதிகளிலும் இந்தப் பரிசோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தின் கோலாகட் நகரில் ஜோகேஸ்வர் போரா என்ற 42 வயது நபருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தனியார் நிறுவனத்தின் பரிசோதனைக் கூடத்தில் அவரது ரத்தம், சிறுநீர் மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக பரிசோதனை முடிவு வந்தது. இந்த முடிவைப் பார்த்து அதிர்ந்து போன, போரா மருத்துவரை அணுகி விவரம் கேட்டுள்ளார். இதையடுத்து வேறு பெண் ஒருவரின் பரிசோதனை முடிவு இவருக்கு வழங்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

இதையடுத்து அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உடலில் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்ததால் அவருக்கு கூடுதல் பரிசோதனை செய்ய பரிந்துரைத்தார்.

அதன்படி அவருக்கு வேறு ஒரு பரிசோதனைக் கூடத்தில் மீண்டும் பரிசோதனை நடந்தது. இதில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், முந்தைய பரிசோதனையில் வந்த கர்ப்ப விவகாரம் இல்லை என்றும் முடிவு வந்தது. இதையடுத்து போரா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

Leave a Reply