shadow

investment2016-ம் ஆண்டில் நம் அஸெட் அலோகேஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்காக திட்டமிடுவது புத்திசாலித்தனமான ஆரம்பமாக இருக்கும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நமது அஸெட் அலோகேஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாணயம் வாசகர்களுக்காக சொல்லி வருவதில் மகிழ்ச்சி.

இந்த ஆண்டில் எந்த சொத்துப் பிரிவில் முதலீடு செய்வது என தீர்மானிப்பது இன்றைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதற்குமுன் ஒரு முதலீட்டின் போக்கு நீண்ட காலத்துக்கு நீடிக்கும். அப்போது நன்றாக செயல்படும் முதலீட்டை தேர்வு செய்வது எளிதாக இருந்தது.

இப்போது முதலீட்டுச் சுழற்சிகள் என்பது குறுகிய காலம் கொண்டவையாக மாறி வருகின்றன. ஒரு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட முதலீடு, அடுத்த ஆண்டிலும் அதுபோல செயல்பட மறுக்கிறது. எனவே, இந்தச் சுழற்சிக்கேற்ப அஸெட் அலோகேஷனை மாற்றி அமைப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது.

இன்றைய முதலீட் டாளர்களின் பொது வான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

* தங்கம் விலை குறைவது நின்று, 2016-ம் ஆண்டிலாவது அதன் விலை உயருமா?

* ரியல் எஸ்டேட் விலை கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு விலை அதிகரிக்க வில்லை. 2016-ல் இதன் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா?

* ஆர்பிஐ வட்டியைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது. கடன் ஃபண்டுகள் கடந்த ஆண்டில் சிறப்பான வருமானம் தரவில்லை. இவை இனி எப்படி செயல்படும்?

* 2014-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை 30 சதவிகித அளவுக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. 2015-ம் ஆண்டில் இது -5 சதவிகிதமாக இருக்கிறது. 2016-ம் ஆண்டில் சந்தை ஏறுமுகமாக இருக்குமா?

எதிர்பார்ப்புகள் இப்படி பலவாறாக இருந்தாலும், இவற்றை நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்களை இனி தீட்டுவோம்.

2016-ம் ஆண்டுக்கான முதலீட்டுத் திட்டங்கள்!

ஓராண்டுக்கு என இலக்கு வைத்து முதலீடு செய்வதற்கு பதில் மூன்றாண்டு என வைத்துக் கொள்வது லாபகரமாக இருக்கும் என்பதே நாம் பின்பற்றி வரும் கடந்த கால நடைமுறை என்பதால், இந்த ஆண்டும் அப்படியே செய்வோம்.

தங்கம்!

ஒரு அவுன்ஸ் (சுமார் 31 கிராம்) தங்கம் 2012-ல் 1,900 டாலராக இருந்தது. இது 1,100 டாலராக வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஒரு டாலர் ரூ.66 என்கிறபட்சத்தில், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,300-க்கு கீழே இருக்க வேண்டும். தங்கம் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசாங்கம் அதிக வரியை விதித்திருப்பதால், இந்தியாவில் தங்கம் விலை இதனைவிட அதிகமாக இருக்கிறது.

இதர முதலீடுகளை போலவே, தங்கமும் ஒரு சுழற்சி சொத்துதான். இந்தியாவில் 1991 முதல் 2001 வரையில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. இந்தக் காலகட்டத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 50% குறைந்தது. ஆனால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு உயர்ந்ததால், இந்தியாவில் தங்கத்தின் விலை குறையவில்லை. பிற்பாடு, 2002-ல் தங்கம் விலை உயர ஆரம்பித்தது. சர்வதேச நிதிச் சந்தைகளில் மந்தநிலை, அமெரிக்கா அதிக அளவில் கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டது போன்றவை இதற்கு காரணம்.

வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்கி, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இப்படி அதிகமானவர்கள் முதலீடு செய்யும்போது விலை உயர ஆரம்பிக்கும். விலை உயரவில்லை எனில், முதலீட்டு நோக் கில் தங்கம் வாங்கிய வர்கள் விற்பார்கள்.

தங்கத்தின் தற் போதைய விலை இறக்கம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. இது இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தொடரும். பண்டிகைக் காலதேவைகள் அல்லது சர்வதேச அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். ஆனால், சப்ளை மற்றும் டிமாண்ட் அடிப்படையில் பார்த்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்கம் நல்ல வருமானம் தர வாய்ப்பில்லை.

ரியல் எஸ்டேட்…!

பங்குகள், கடன் ஃபண்டுகள், தங்கம் போன்ற நிதி சார்ந்த சொத்துகளுக்கு வருமானத்தைக் குறிப்பிடும் இண்டெக்ஸ் இருப்பது போல், தினசரி அல்லது குறிப்பிட்ட காலத்தில் விலை மாற்றத்தை குறிக்கும் குறியீடு ரியல் எஸ்டேட்டுக்கு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தேசிய வீட்டு வசதி வங்கி, மெட்ரோ நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை மாற்றத்தை வெளியிட்டு வருகிறது. ஆனால், இந்த விலை மாற்றம் என்பது நகரத்துக்கு நகரம், பகுதிக்குப் பகுதி வேறுபடுவதாக இருக்கிறது. இதனால் இதன் அடிப்படையில் முடிவு எடுப்பது கஷ்டமான காரியம். அதேநேரத்தில், வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து குறைவதாக இருக்கும்.

ரியல் எஸ்டேட் துறையின் புள்ளிவிவரங்கள்படி, தற்போது நடந்துவரும் புராஜெக்ட்டுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவையை ஈடுகட்ட போதுமானதாக இருக்கும். அந்த வகையில், ரியல் எஸ்டேட்டுகளின் விலை இன்னும் குறைய வாய்ப்பு உண்டு. தவிர, மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்க அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகள், கறுப்புப் பணம் அதிகமாக புழங்கிய ரியல் எஸ்டேட் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

எந்த ஒரு சொத்துப் பிரிவை எடுத்துக் கொண்டாலும் வாங்குபவர், விற்பவர், நிதி உதவி செய்பவர் என மூன்று பிரிவினரை சார்ந்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட்டில், வாங்குபவர்கள் ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக, தங்களின் பெரும்பகுதி முதலீட்டை ரியல் எஸ்டேட்டில் போட்டிருக்கிறார்கள். விற்பவர்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி இருக்கிறார்கள். உதாரணமாக, அவர்களிடம் சொந்தமாக இருக்கும் ரூ.100-க்கு எதிராக ரூ.400-க்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார்கள். நிதி உதவி செய்பவர்களும் இந்தத் துறைக்கு அதிக அளவில் கடன் தந்துவிட்டார்கள். எனவே, இந்த மூன்று நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் முழுமையான முதிர்வு அடைந்திருக்கும் பட்சத்தில், இனி எப்படி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும்?

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இனிவரும் காலங்களில் இரண்டு விதமான விலை இறக்கம் காண வாய்ப்பு இருக்கிறது. தற்போது ரூ.100 மதிப்புள்ள சொத்து ரூ.150 என சொல்லப்படுகிறது. விலை இறக்கத்தில் இது ரூ.100-ஆக குறைய வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது வகை விலை இறக்கம் என்பது டைம் கரெக்‌ஷன். ரியல் எஸ்டேட் விலை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.150 என்கிற நிலையில் தொடர்ந்து இருந்து, விலை ஏறாமலே இருப்பது. இப்படி இருக்கும்போது, இந்தச் சொத்தை கடனுக்கு வாங்கி இருந்தால், வட்டி நஷ்டம் ஏற்படும். மேலும், பணவீக்க விகிதம் சராசரி அளவாக இருந்தாலும் விலை அதிகரிக்கவில்லை என்பதால் இழப்புதான் ஏற்படும். ரியல் எஸ்டேட் விலை குறைவது அல்லது ஐந்தாண்டுகளுக்கு வருமானம் எதையும் தராமல் இருப்பது ஆகிய இரு காரணங்களினாலும் ஏற்படு்ம் பாதிப்பு ஒன்றுதான். அதாவது, நஷ்டம்தான்.

எனவே, வரும் ஆண்டுகளில் முதலீட்டு நோக்கில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். தற்போது ரியல் எஸ்டேட் துறை சந்தித்துவரும் பிரச்னைகளால் அதன் விலை இன்னும் இறங்கும். குறைந்த விலையில் அதை வாங்கும் நல்ல வாய்ப்பை வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் அளிக்கக்கூடும். உங்கள் போர்ட் ஃபோலியோவில் ரியல் எஸ்டேட்டுக்கு ஓர் இடம் ஒதுக்க நினைத்தால் சிறிது காத்திருப்பது நல்லது.

கடன் ஃபண்டுகள்..!

சர்வதேச அளவில் வட்டி விகிதம், 2007 மற்றும் 2014 இடையே கணிசமாக குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்ததால், வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. அண்மைக் காலத்தில் பணவீக்க விகிதம் குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் ஆர்பிஐ வட்டியை ஓரளவுக்கு குறைத்திருக்கிறது.

இந்த வட்டி விகித குறைப்பினால் உருவான பலன் வாடிக்கையாளர்களுக்கு போய் சேர கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதால், இது சந்தையில் எதிரொலிக்க வில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வட்டி விகிதம் குறையும் சூழல் இருக்கிறது.

டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள் வேறு முதலீட்டு வாய்ப்பை தேடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் நீண்ட கால கடன் ஃபண்டுகள் மிகவும் கவர்ச்சிகரமான முதலீடாக மாறும்.

பங்குச் சந்தை..!

கடந்த 2014-ம் ஆண்டில் பங்குச் சந்தை குறியீடுகள் 30 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தது. பல ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளின் விலை 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்தது. இது 2015-ம் ஆண்டிலும் பிரதிபலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால்W, 2015-ம் ஆண்டில் லார்ஜ் கேப் பங்குகளின் வருமானம் சிறிது இறக்கத்தில் இருக்கிறது. ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளின் விலை சிறிது அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

2015-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை ஏன் வருமானம் தரவில்லை என்பது முக்கியமான கேள்வி. இதற்கான காரணங்கள் பல. கடந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 6 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது.

நடப்பு 2016-ம் ஆண்டிலும் இந்த வருமான வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன. தவிர, நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்காததால், அதிக பி/இ உள்ள பெரிய நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்த்தார்கள். அவர்கள் குறைந்த பி/இ பங்குகளை வாங்கத் தொடங்கினர். இதனால் லார்ஜ் கேப் பங்குகளின் விலை குறைந்தது.

அமெரிக்காவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட வட்டி விகித உயர்வு நடந்தது. இதனால் சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டை குறைத்துக் கொண்டதால், சந்தை இறக்கம் கண்டது. மேலும், 2015-ம் ஆண்டில் வந்த பல செய்திகள் நெகட்டிவ் ஆனவை. முடிந்த ஆண்டில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பெரிய அளவில் மூலதன முதலீட்டை மேற்கொள்ள வில்லை.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, தங்க இறக்குமதி செலவு குறைந்தது, நிலக்கரி / இரும்பு சுரங்கங்கள், டெலிகாம் ஏல நடைமுறையில் சிறப்பான நிர்வாகம், ஆதார் கார்டு பயன்பாட்டுக்கு வந்திருப்பது, மானியம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது போன்றவை அரசின் நிதி நிலையை மேம்படுத்தி இருக்கிறது. இவற்றின் விளைவாக உருவாகும் பயன் நிறுவனங்களின் வருமானத்தில் நீண்ட காலத்தில்தான் முழுமையாக தெரியும். அதாவது, நிறுவனங்களில் அது லாபமாக மாற சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அப்போது பங்குகளின் விலை அதிகரிக்கும்.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யும் தவறு, அவர்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வருமானத்தையே கவனிக்கின்றனர். இந்தக் குறியீடுகள் பங்குச் சந்தையின் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மார்கெட் கேப்பிட்டலைசேஷனை கொண்டிருந்தாலும், அவை முன்னைவிட இப்போது இறக்கத்தில் இருக்கின்றன. இந்தக் குறியீட்டில் சுமார் 30% தனியார் வங்கிகளையும் 15% ஐடி, பார்மா மற்றும் எஃப்எம்சிஜி துறைப் பங்குகளையும் சார்ந்ததாக இருக்கிறது. இந்த துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் 2007-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வந்ததால், அவற்றின் பங்குகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இது போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை அவற்றின் வரலாற்று உச்ச பி/இ-ஐ எட்டி வர்த்தகமாகி வருகின்றன. அவை மேலும் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் வருமானம் கடந்த காலங்களை போல் அதிகரித்தாலும், அவற்றின் பி/இ மிகவும் அதிகமாக இருப்பதால், வருமான அதிகரிப்புக்கேற்ப பங்குகளின் விலை அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியே. அதேநேரத்தில், முக்கிய குறியீடுகளில் இடம்பெறாத வாகனம், சிமென்ட், சிறப்பு வகை ரசாயனங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்கள், பொருளாதாரம் மேம்படும்போது, சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு..!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என பிரித்து முதலீடு செய்த ஃபண்டுகள் எல்லாம் 2015-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. இது வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனலாம்.

2015-ம் ஆண்டில் பங்குச் சந்தை குறியீடுகளில் பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும் 100-க்கும் மேற்பட்ட பங்குகளின் விலை 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதே நிலை அடுத்துவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பங்குச் சந்தை முதலீடு லாபம் தருமா, தராதா என சந்தேகத்துடன் நாம் பார்க்கும்போது, அதில் ஏன் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழலாம். சர் ஜான் டெம்பிள்டன் சொன்ன கருத்துதான் இதற்கான பதிலாக சொல்ல முடியும்.

‘‘சந்தை நெகட்டிவ்-ஆக இருக்கும்போதுதான் காளை சந்தை பிறக்கிறது. சந்தையை சந்தேகத்துடன் பார்க்கும்போது, அது வளர்ச்சி காண்கிறது. நன்றாக இருக்கும் என பெரும் பாலானோர் நினைக்கும்போது அது முதிர்வு அடைகிறது. சந்தை எதற்கெடுத்தாலும் ஏறும் என்கிற நிலையில் அது இறங்குகிறது” (Bull markets are born in pessimism, grow in skepticism, mature in optimism and die on Euphoria). தற்போதைய நிலையில் இந்தியப் பங்குச் சந்தை சந்தேகமாக பார்க்கப்படுவ தால், வரும் ஆண்டுகளில் அது வளர்ச்சி காணும் எனலாம்.

தற்போதைய புராஜெக்ட்டுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவையை ஈடுகட்டும் என்பதால், ரியல் எஸ்டேட்களின் விலை இன்னும் குறையலாம்!

டெபாசிட் வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள் வேறு முதலீட்டு வாய்ப்பை தேடும் நிலை உருவாகும்!

வருகிறது… ஸ்மார்ட் சிட்டி பட்டியல்!

மத்திய அரசின் பிரமாண்ட திட்டங்கள் சிலவற்றில் ஸ்மார்ட் சிட்டியும் ஒன்று. இந்தியா முழுக்க 20 ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்யும் பணி கடந்த டிசம்பர் 16 முதல் இந்த ஜனவரி 16-ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா முழுக்க எந்தெந்த நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும் நிலையில், ஜனவரி 16-ம் தேதியன்று ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியல் வெளியிடப்படும் என மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 145 விஷயங்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் சிட்டிகள் தேர்வு செய்யப்பட இருக்கிறதாம். இதில் 21 விஷயங்கள் நீர் மேலாண்மையில் எந்த அளவுக்கு திறமையாக திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாக இருக்கிறதாம். நீர் மேலாண்மை தொடர்பான விஷயத்தை வைத்துப் பார்க்கும்போது, அண்மையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சென்னைக்கு ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து கிடைக்குமா?

Thanks to vikatan.com

Leave a Reply