இஸ்ரோ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 43 நிமிடங்களும் நாங்கள் பரபரப்பாகவே இருந்தாம். புயல் எச்சரிக்கை, மழை பொழிவு போன்ற காரணங்களால் தயக்கம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி மங்கல்யான் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் செலுத்துவதற்காக பெரும் முயற்சி எடுத்தோம். இந்த தீவிர முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்த விண்கலத்தில் உள்ள ஆற்றல் பெறுவதற்கான சூரியத் தகடுகளை விரிக்கும் பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெறும். மேலும் 1963 நவ.2ல் தொடங்கப்பட்ட இஸ்ரோவின் பொன் விழா ஆண்டில் செவ்வாய்க்கும் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளோம். நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்,1 செயற்கை கோள் 2008ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. அதனுடைய ஆய்வுக்காலம் 312 நாட்கள். அந்த 312 நாட்களிலும் ஆய்வு வெற்றிகரமாக நடைப்பெற்றது.

இப்போது சந்திராயன்,2 செயற்கைகோள் 2016ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும். அதையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவோம். இந்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 3வது ஏவுதளம் அமைப்பதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது. அப்படி அமைந்ததும் ஆண்டுக்கு 10 முதல் 13 ராக்கெட்கள் ஏவ முடியும். மங்கல்யான் நீண்ட பயணத்தின் முதல் அடி. மங்கல்யான் செயல்பாடுகள் தினமும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

நொடிக்கு நொடி டென்சன்

பகல் 2.38மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி நேராக பாய்கிறது. ஒரு நிமிடம் 53 விநாடிகளில் இரண்டாம் நிலைக்கு சென்றது. அப்போது ராக்கெட் திசை மாறத்தொடங்கியது. அதற்கு 4 நிமிடங்கள் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டது. அதன்பிறகு 3வது கட்டமாக முழுவதும் சாய்வாக அதாவது சாய்வு பரிமாண நிலைக்கு ராக்கெட் மாறியது. இப்படி சாய்வாகவே தொடர்ந்து 25 நிமிடங்கள் சென்றது.

தொடர்ந்து 4வது கட்டமாக 12 நிமிடங்கள் 28 விநாடிகள் புவி வட்ட பாதையில் தொடர்ந்து சென்றது. அப்போது ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் தனியாக பிரியும் பணி தொடங்கியது. மண்ணில் இருந்து புறப்பட்ட 43.46 நிமிடங்களில் ராக்கெட் தனியாகவும் செயற்கைகோள் தனியாகவும் பிரிந்தது. இனி செவ்வாய் நோக்கிச் செல்வதற்கான ஆற்றலை சூரியசக்தி மூலம் பெறும் பணி தொடங்கும். அதற்காக செயற்கைகோளில் உள்ள சூரியத்தகடுகளை விரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையம் தொடங்கும்.

Leave a Reply