shadow

மெளலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு. சி.எம்.டி.ஏ செயலர் அறிவிப்பு

moulivakkamசென்னை மௌலிவாக்கத்தில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் நாள் கடந்த சில நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் நாளை மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் சர்ச்சைக்குரிய 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மெளலிவாக்கத்தில் உள்ள 11 அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க நவீன உள் வெடிப்பு தொழில்நுட்ப முறை (“இன்ப்ளோஷன்’ பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, வெடி மருந்துகள் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்து, அதே இடத்தில் கட்டடம் உள்நோக்கி விழும் வகையில் இடிக்கப்பட உள்ளது.

இடிக்கப்பட உள்ள இந்த கட்டடத்தைச் சுற்றி 100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் நிலை, பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ உள்ளிட்டவை மூலம் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரிவான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாற்காலிக தங்குமிடம்-ஆம்புலன்ஸ் வசதி: பொதுமக்கள் தாற்காலிகமாக தங்குவதற்கு மதனந்தபுரம் பிரதான சாலையிலுள்ள ஸ்ரீ எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்குமிடத்துக்குச் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதியும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல், 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கட்டடம் இடிப்பது குறித்தும், மாற்று இடத்துக்குச் செல்வது குறித்தும் தனித்தனியாக அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே…: மேலும் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பு காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்புதான் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

பீதி வேண்டாம்: கட்டடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. கட்டடம் இடிக்கப்படும் பணி முடிவடைந்தவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும். எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply