shadow

வீட்டை அழகுபடுத்த வங்கிக்கடன் கிடைக்குமா?

வீடுகட்டுவதற்குத்தான் வங்கிகள் கடன் கொடுக்கும். வீட்டை அழகுபடுத்த வங்கிக்கடன் கிடைக்குமா? என்பதை தற்போது பார்ப்போம்

நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலும் சொந்த வீட்டுக்கு வங்கிக் கடனையே சார்ந்திருக்கிறார்கள். முன்பைவிடக் கடன் அளிக்கும் நிதிநிறுவனங்கள்,வங்கிகள் பெருகியிருக்கின்றன. ஆனால், 80 சதவீதம் மட்டுமே வங்கிக் கடனாகக் கிடைக்கும். மீதித் தொகையை அப்படி இப்படித்தான் தயாராக்க வேண்டும். சிறு சேமிப்பு இல்லையென்றால் தனி நபர்க் கடன் மூலம்தான் ஆரம்ப வேலைகளைச் சமாளிக்க முடியும். ஆனால், என்னதான் நாம் முன்கூட்டியே திட்டமிட்டாலும் கட்டுமானச் செலவு கைமீறிப் போய்விடும்.

ஒருவழியாக வீடு கட்டி முடித்த பிறகு வீட்டுக்குள் செய்யும் சிறிய சிறிய மாற்றங்களுக்கு டாப் அப் கடன் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, சமையலறையை முறையாக மாடுலர் சமையலறையாக மாற்றுவதாக இருக்கும்பட்சத்தில் அதற்குக் கடன் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் கூடுதலாக ஒரு அறையை உருவாக்க நினைத்தால் அதற்கும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

மட்டுமல்லாமல் அறைக்கலன்கள் வாங்குவதற்கும் இந்த டாப் அப் வசதியைப் பயன்படுத்த முடியும். மேலும், உங்கள் வீட்டின் பின்பகுதியில் அல்லது முற்றப்பகுதியில் ஒரு சிறிய அளவில் ஒரு அறை எடுக்க விரும்பினாலும் அதற்காகவும் இந்த டாப் அப் கடன் வசதியைப் பயன்படுத்த முடியும். கார் நிறுத்தத்தை உருவாக்க விரும்பினாலும் அதற்காகவும் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்த முடியும்.

வீட்டுக் கடன் வாங்கி குறைந்தது 6 மாதம் ஆகியிருக்க வேண்டும் அப்படியானால்தான் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனச் சொல்லப்படுகிறது. வீட்டுக் கடன் வாங்கிய ஆண்டுகளைப் பொறுத்து கடன் அளிக்கப்படுகிறது. அதாவது முதலில் வாங்கிய வீட்டுக் கடன் தொகையிலிருந்து 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்தும் முந்தைய கடனில் கட்டி வரும் காலத்தைப் பொறுத்தும் இது மாறுபடும். 50 சதவீதத்துக்கும் கூடுதலாகக் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டாப் அப் கடனை வீட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் பட்சத்தில் இந்தக் கடனுக்கு வரிச் சலுகையும் பெற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடன் வட்டியிலிருந்து 1 சதவீதம் அளவுக்குக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. இது வங்கிகளைப் பொருத்து மாறுபடும். இந்தக் கடன் பெறுவதற்குத் தனியாக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனுக்காகச் சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களே போதுமானவை.

Leave a Reply