shadow

வீட்டுக்குள் மழைநீர் நுழைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சென்னைப் புறநகர் மக்களைப் பொறுத்தவரை மழைக் காலம் என்றாலே கவலைக்குரிய ஒன்றாகிவிட்டது. கடும் மழை பெய்து மழை வெள்ளம் வீட்டுக்குள் வந்துவிடும் என்ற பயம் இதற்குக் காரணம். அதற்காக மழை பெய்யாமல் இருக்குமா? நாம்தான் இம்மாதிரியான நிகழ்வுகளை எதிர்கொள்ளப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது.

வீட்டுக்குள் தண்ணீர் நுழையாதபடி தடுப்புகளை எழுப்பிக் கொள்ளலாம். டிஷ் டி.வி. தொடர்பு கடும் மழையின்போது இல்லாமல் போகக்கூடும். வானொலிதான் இதுபோன்ற சமயங்களில் கை கொடுக்கும் நண்பன்.

ரப்பர் ஷூக்கள் வைத்திருப்பது நல்லது. தண்ணீரில் லேசாக மின்சாரம் பாய்ந்திருந்தாலும் பாதுகாக்கும். தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் வீட்டுக்குள் இருந்தால்கூட இந்த வகை ஷூக்களை அணிந்துகொள்ளுங்கள்.

தண்ணீர் வீட்டுக்குள் வரும் வாய்ப்பு உண்டு எனும்போது தீப்பற்றக்கூடிய பொருட்களையெல்லாம் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள். கேஸ் சிலிண்டர்களைக்கூட மேடையின்மீது வைத்து விடலாம்.

மின் சாதனங்கள் ஈரமாக இருந்தால் அவற்றை இயக்க வேண்டாம். ஷாக் அடிப்பதிலிருந்து தீப்பற்றுவதுவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மேஜை மற்றும் பீரோக்களின் கீழ் அறைகளிலுள்ள முக்கியப் பொருட்களை எடுத்து மேலே வைத்து விடுங்கள். வெளிக் கதவைச் சாத்தி விடுங்கள்.

காரைத் தெருவில் நிறுத்த வேண்டாம். கேரேஜில் வைத்து விடுங்கள். குழாய் நீரை ஒருபோதும் குடிக்க வேண்டாம்.

செல்போனை முதலிலேயே முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள். பவர் பேங்க் வீட்டில் இருந்தால் அதையும் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ளுங்கள். அநாவசியமான தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்து விடுங்கள்.

வீட்டை இன்சூரன்ஸ் செய்துவிட்டீர்களா? பாதிப்பு ஏற்படுவதற்கு முன், பாதிப்புக்குப் பின் என்று இரு நிலைகளிலும் வீட்டையும் வீட்டிலுள்ள பொருட்களையும் ஒளிப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.

கடும் மழை பெய்யும் சீசன் என்றால் ஏ.டி.எம்-ஐ மட்டுமே நம்பியிராமல் ரொக்கமாகப் பணம் வைத்துக் கொள்ளுங்கள்.

சாதாரண நாட்களிலேயே உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் எங்கெல்லாம் கழிவுநீர் மூடிகள், பெரிய பள்ளங்கள் ஆகியவை உள்ளன என்பதைக் பார்த்துவைத்துக்கொண்டால் வெள்ளத்தில் நடக்கும்போது உதவியாக இருக்கும்.

வீட்டிலுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை நீக்கிவிடுங்கள் அல்லது பரணில் வைத்து விடுங்கள். அதிலுள்ள விஷப்பொருட்கள் தண்ணீரில் கலந்தால் ஆபத்து.

வெள்ளம் வடிந்த பிறகு வாகனத்திலுள்ள ஈரத்தை நீக்கிவிடுங்கள். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் தண்ணீர் வடிவதற்கு முன்பாக வண்டியை ஸ்டார்ட் செய்யாதீர்கள். பெட்ரோலில் தண்ணீரும் கலக்கும் நிலையில் வண்டியை ஸ்டார்ட் செய்தால் அது இன்ஜினைப் பாதிக்கும்.

வெள்ளப் பகுதிகளில் வாகனத்தைத் தவிர்த்துவிடுங்கள். ஓட்ட வேண்டியது கட்டாயம் என்றால் மெதுவாக ஓட்டுங்கள். ஹெட் லைட்களை ஆன் செய்யுங்கள். இரண்டடி கொண்ட வெள்ளம்கூட வாகனத்தைப் புரட்டிப் போடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ‘பிரேக்’கை மெதுவாகவும், சற்று முன்னதாகவும் இயக்குங்கள்.

வீட்டிலுள்ள எமர்ஜென்சி விளக்குகள், சார்ஜபிள் டார்ச்லைட் போன்றவற்றை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்காதீர்கள். உடனடியாக வீட்டுக்குள் வரச் சொல்லுங்கள்.

வீட்டின் ஜன்னல்களை மூடிவிடுங்கள். முடிந்தவரை உட்புறமுள்ள அறைகளில் இருங்கள். மின்னல் பாய ஜன்னல் வழிவகுக்கலாம். முடிந்தவரை கான்க்ரீட் தளங்களில் படுத்துக்கொள்ளவோ சாயவோ வேண்டாம்.

குளியலறைத் தொட்டி மற்றும் ஷவரைப் பயன்படுத்த வேண்டாம். வெளியே சென்றாக வேண்டுமென்றால் மின்னல், இடி ஓய்ந்த அரைமணி நேரத்துக்குப் பிறகு செல்லுங்கள்.

Leave a Reply