வீடு வாங்குவதற்கு முன் முதலில் என்ன செய்ய வேண்டும்?

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் மட்டுமின்றி நம்முடைய தலைமுறையே வாழ வேண்டிய ஒரு வீட்டை வாங்கும் முன் முதலில் என்ன செய்ய வேண்டும்

நீங்கள் ஒரு வீட்டை வாங்கத் தீர்மானித்தால் அதற்கான விலையை விற்பவர் கூறுவார். ஒத்துக்கொண்டால் அந்த வீடு தொடர்பான ஆவணங்களைக் கொடுப்பார் சிலர் ஒரு சிறு தொகையையாவது அளித்தால்தான் அந்த ஆவணங்களின் பிரதிகளைக் கொடுப்பார்கள். இந்த ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்ப்பதே உங்களால் இயலாததாக இருக்கும். மேலும் பெரும்பான்மையான ஆவணங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. எதையாவது தவறாகப் புரிந்துகொண்டால் அது மீள முடியாத சிக்கலில் கொண்டு விடலாம். எனவே நீங்கள் வீடு வாங்கும் முன் வாங்க வேண்டிய வீட்டின் ஆவணங்களை ஒரு வழக்கறிஞரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும்

வழக்கறிஞர் கீழே உள்ள கோணங்களில் ஆவணங்களைச் சரிபார்ப்பார்.

# இப்போது அந்த வீடு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா?
# அந்த வீட்டைப் பொறுத்தவரை மைனர்களின் உரிமை என்று இருந்து அது மீறப்பட்டுள்ளதா?
# எந்தவிதத்திலாவது வீட்டுப் பரிவர்த்தனைகளில் வில்லங்கம் உண்டாகி இருக்கிறதா?
# நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் அதற்கு இருக்கிறதா, விதிமீறல் எதுவும் இல்லையா?
# பட்டா போன்ற உரிய ஆவணங்கள் அதற்கு உள்ளனவா?
# சொத்துவரி, தண்ணீர் வரி போன்றவை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா?
# நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அது வராமல் இருக்கிறதா?
# தடைசெய்யப்பட்ட பகுதியில் (கடற்கரை ஓரம், தொழிற்பகுதி, விவசாய நிலம் போன்றவை) அந்த வீடு எழுப்பப்படாமல் இருக்கிறதா?
# வீட்டின் உரிமையாளர் இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்றவை பெறப்பட்டுள்ளனவா?
# குத்தகை, யாரையாவது குடியிருக்க வைத்தல் போன்றவை இருந்து அவை வீடு விற்பதற்கான உரிமையைத் தடைசெய்கிறதா?

இவற்றையெல்லாம் சரிபார்த்து வழக்கறிஞர்,“எல்லாம் சரியாக இருக்கிறது. நீங்கள் வீட்டை வாங்கலாம்’’ என்று சான்றிதழ் அளிப்பார். அப்படி அளித்தபோதிலும் இதில் வேறொரு கோணத்திலும் முன்னெச்சரிக்கை தேவை. விற்பவர் வசமுள்ள மூலப் பத்திரங்களும், உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நகல்களும் ஒன்றோடொன்று ஒத்துப் போகிறதா என்பதை நீங்கள் சரிபார்ப்பது அவசியம். விற்பவர் மூல ஆவணங்களை அளிக்க மறுக்கலாம் என்பதால் அவரது இடத்துக்கே சென்று இதை சரிபார்க்க வேண்டும். கூடவே வழக்கறிஞரையோ அவர் ஜூனியரையோ அழைத்துச் செல்லுங்கள்.

Leave a Reply