shadow

வாடகைக்கு வீடு தேடுகிறீர்களா?

புதிய ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பிறக்கிறது. ஆனால் பட்டிக்கிற பிள்ளைகளின் கணக்குப்படி ஜூனில்தான் ஆண்டு தொடங்குகிறது. அதைக் கல்வியாண்டு என்கிறோம். இந்தக் கல்வியாண்டைக் கணக்கு வைத்து வேலை மாற்றம், வீடு மாற்றம் எல்லாம் நடக்கும். வீட்டை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது, ஒரு ஊரிலிருந்து மற்றொருக்கு மாற்றுவது எல்லாம் இந்தச் சமயத்தில் நடக்கும். அதனால் வாடகைக்கான வீடுகள் இந்த மாதத்தில் அதிகம் காலியாகும். இதனால் வாடகை வீட்டை மாற்ற நினைப்பவர்களும் இந்த மாதத்தில் வீடு பார்க்கத் தொடங்குவர்.

இந்தக் காலகட்டத்தில் வீட்டுக்கு முன்பணம் கொடுப்பத்தில் தொடங்கி வாடகை வீடு குறித்துப் பல சந்தேங்கள் வரும். இதைத் தீர்க்கம் பொருட்டு வாடகை வீடு குறித்த சந்தேகங்களும்:

வாடகைக் கட்டணமும் முன் பணமும்

வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.

வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.

வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.

வாடகைதாரர் எந்தக் காரணங்களுக்கு காலிச் செய்யச் சொல்லலாம்?

உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.

வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலும் காலிசெய்யச் சொல்லலாம். வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது… அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தாலும்(மலைவாசஸ்தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது) காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு பெற முடியுமா?

வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.

வாடகைதாரர் வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?

சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?

தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.

Leave a Reply