shadow

வரவேற்கும் வாசல்களை அமைப்பது எப்படி?

entranceவீட்டின் தோற்றத்தைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடியவை வாசல்கள். அதனால் வாசலை வடிவமைக்கும்போது, விருந்தினர்களை வரவேற்கும் அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வெளிச்சம், வராந்தாவில் வைக்க வேண்டிய பொருட்கள், அலங்காரம் போன்றவை வாசல் வடிவமைப்பின் முக்கியமான அம்சங்கள். உங்கள் உங்கள் ரசனையை வெளிப்படுத்தும் இடம் வாசல். அதனால், இந்த இடத்தை வடிவமைக்க உள்அலங்கார வடிமைப்பாளர்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாசலை வடிவமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

விதவிதமான விளக்குகள்

வாசலில் பயன்படுத்தும் விளக்குகளை ஒரேவிதமாகப் பயன்படுத்தாமல், மேஜை விளக்கு, கூண்டு விளக்கு (lantern), ஸ்கான்ஸ் (sconce) விளக்கு எனத் தனித்துவமான விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்போது தரை விளக்குகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது.

கலை வண்ணம்

சில வீட்டின் வாசல்களே, அந்த வீடு உள்ளே எப்படியிருக்கும் என்பதைச் சொல்லிவிடும். கதவைத் திறந்தவுடன், உங்கள் கலை ரசனையை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி, இரண்டு நாற்காலிகளுடன் ஒரு சிறய மேசை, வண்ணமயமான தரைவிரிப்பு என வாசலை வடிமைக்க முடியும்.

அளவுக்கு ஏற்ற அலங்காரம்

வாசலின் அளவுக்கு ஏற்றபடி அதன் வடிவமைப்பை மாற்ற வேண்டியது முக்கியம். ஒருவேளை, உங்கள் வீட்டின் வாசல் அகலமாக இருந்தால், ஓரத்தில் ஒரேயொரு சிறிய மேசையை மட்டும் வைத்தால் அது எடுபடாது. அதனால், அதற்கேற்றபடி பெரிய அளவிலான மேஜை, பூஞ்ஜாடி, விளக்குகள், கண்ணாடி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை வைத்தும் இடம் மீதமிருந்தால் உட்காருவதற்கு வசதியாக ஒரு மர பெஞ்சையும் வாசலில் போடலாம்.

வடிவமைப்பு பாணி

வீடு முழுக்க எந்தவிதமான உள் அலங்கார வடிவமைப்புப் பாணியைப் பின்பற்ற முடிவெடுத்திருக்கிறீர்களோ, அந்த பாணியின் அறிமுகத்தை வீட்டின் வாசலில் இருந்தே தொடங்கலாம். உதாரணமாக, உங்கள் வீட்டின் உள் அலங்காரக் கருவாக மரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அப்போது, உங்கள் வாசலில் விரிக்கும் தரைவிரிப்பில் ஆரம்பித்து, கண்ணாடி, மேசை, விளக்குகள் என எல்லாவற்றையும் மரத்தின் சிறு பிரதிபலிப்பாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது வீட்டின் உள்ளே எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தை விருந்தினர்களுக்கு ஏற்படுத்தும்.

நீடித்து உழைக்கும் தரைவிரிப்பு

வாசலுக்கான தரை விரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, நீடித்து உழைக்குக்கூடியதாக இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். இந்தத் தரை விரிப்பில் உங்களுக்குப் பிடித்த பேட்டர்ன், வண்ணம் போன்றவற்றை இணைத்துக்கொள்ளலாம்.

அடர் நிறங்கள்

வாசல் பகுதியில் அடர்நிறங்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது. இது வீட்டுக்குள் நுழைந்தவுடன் விருந்தினர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு, கருநீலம், மஞ்சள் போன்ற வண்ணங்களை வாசலுக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிறங்கள்.

வால்பேப்பர் வடிவமைப்பு

வீட்டின் வரவேற்பறை சுவரில்தான் வால்பேப்பரைப் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்ல. அதை வீட்டின் வாசலில் இருந்தே தொடங்கலாம். இந்த இடத்தில் கிளாசிக்கான வால்பேப்பர் வடிவமைப்புகளைப் பயன்படுத்தலாம்.

பொருட்களையும் வைக்கலாம்

வாசலில் இருக்கும் இடத்தில் சில அறைக்கலன்களையும் வைத்துகொள்ள முடியும். உதாரணமாக, சிறிய கண்ணாடி யுடன்கூடிய மேஜை, இழுப்பறை மேஜை போன்றவற்றை இந்த இடத்தில் போடலாம்.

உள்ளூர் சிறப்பு

உங்கள் ஊரின் சிறப்பைப் பறைசாற்றும் ஏதாவது ஓர் அலங்காரத்தை வாசலில் இணைக்கலாம். உங்கள் ஊரின் ஓவியங்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை வைத்து வாசலை அலங்கரிக்கலாம்.

Leave a Reply