shadow

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி- சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து உடனடியாக சிறையில் அடைப்பு

கால்நடை தீவன வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் உடனடியாக ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

பிகாரில் கடந்த 1990ஆம் ஆண்டு மாட்டு தீவனம் வாங்கியதில் ரூ. 960 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அட்டிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 43-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என கடந்த 2013-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் லாலு இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப்பட்டதாக அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று சரியாக பிற்பகல் 3.30 மணியளவில் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை விபரம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply