shadow

மே 10 சித்ரா பௌர்ணமி: தென்கயிலாய யாத்திரை

வடக்கே கயிலாயம் போக முடியாத பக்தர்களுக்கு இது தென்கயிலாயம். லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு சித்ரா பௌர்ணமியன்று யாத்திரை வந்து ஏழுமலைகளை தடியூன்றிக் கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலிலுள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்கிறார்கள். வருடந்தோறும் பிப்ரவரி 1-ம்தேதி தொடங்கி மே 31-ம் வரை நடக்கும் இந்த யாத்திரையின் உச்சம் தொடுவதே சித்திரை பெளர்ணமி தினம்.

இந்த நாளிலும் இதற்கு முந்தைய பிந்தைய இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் பக்தர்கள் மலையேறுகிறார்கள். இந்த ஆண்டு 10-ம் தேதி வரும் சித்ரா பெளர்ணமி நாளில் எப்படியும் ஒரு லட்சம் பக்தர்கள் மலையேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 9, 10 ஆகிய இரு தினங்களில் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதானத்தில் சித்ரா பெளர்ணமி சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.

சிவனுக்கு உகந்த பிரதோஷம்

மே 8-ம் தேதி சிவனுக்குப் பிடித்த பிரதோஷம் என்பதால் அன்றைய தினம் ஆண்டுதோறும் உச்சிகால பூஜையில் நடக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது. பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் போல் லிங்க வடிவான சிவனுக்கு அன்னத்தை படைத்து முழுக்க அன்னத்தாலேயே மூடி அபிஷேகம் செய்து அந்த அன்னத்தை எடுத்து பக்தர்களுக்கு கொடுக்கப்படும். அதை உண்டால் தீராப்பிணி தீரும் என்பதும் திருமண தடை நீங்குமென்றும், குழந்தையின்மையால் வாடுபவர்களுக்கு வேண்டுவன கிட்டும் என்பதும் ஐதிகம். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் விடப்படும்.

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் வரும் செவ்வாய் புதன்கிழமை இரவு ஆகிய இரண்டு நாட்களிலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 1 லட்சம் பக்தர்கள் மலையேறுகிறார்கள். இவர்களுக்காக சிறப்பு அன்னதானம், மற்றும் ஆறுகால பூஜை ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து இத்திருக்கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதானத்தில் வழக்கம் போல் நடக்கும் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என உள்ள முக்கால பூஜைகளை தவிர, இரவு 8 மணி, இரவு 10.30 மணி, அதிகாலை 4 மணி என இரவுக்கால மூன்று பூஜைகளும் செய்யப்படும். உச்சி மலையில் உள்ள சுயம்புலிங்கத்திற்கு தொடர்ந்து ஐந்து கால பூஜைகள் ஏலதாரர்கள் செய்கிறார்கள். சித்ரா பெளர்ணமியன்று கூடுதல் கால பூஜைகள் செய்யப்படும். பெளர்ணமி அன்று மட்டும் ஒரு லட்சம்பேருக்கு குறையாமல் பக்தர்கள் மலையேற்றம் இருக்கும் என்பதால் அன்றைய தினம் இரவு பகல் என்றில்லாது கோயில் வளாகத்தில் அத்தனை மண்டபங்களிலும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!” என்று தெரிவித்தனர்.

Leave a Reply