shadow

மேல்தள வீடு மேலானதா?

ஒரு ஃப்ளாட் வாங்கத் தீர்மானித்துவிட்டீர்கள். எந்த இடத்தில் விற்கப்படும் ஃப்ளாட்டை வாங்கலாம், நியாயமான விலையா, வங்கிக் கடன் கிடைக்குமா என்பதையெல்லாம் யோசித்திருப்பீர்கள்.

கூடவே எழக்கூடிய இன்னொரு கேள்வி உண்டு. எந்தத் தளத்திலுள்ள அடுக்ககத்தை வாங்கலாம்? முக்கியமாக மேல்மாடியில் உள்ள அடுக்ககத்தை வாங்குவது புத்திசாலித்தனமா?

உச்சத்திலுள்ள ஃப்ளாட்டை வாங்குவதில் பல நன்மைகள் உண்டு. முக்கியமாகக் கொசுத் தொல்லை இருக்காது. அல்லது குறைவாகவே இருக்கும். பொதுவாகவே மேல் தளங்களில் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருக்காது.

தலைக்குமேல் உள்ள தளத்தில் யாரும் ‘டம்டம்’ என்று நடந்து உங்களுக்குத் தலைவலியை உண்டாக்கும் வாய்ப்பு கிடையாது. மேல்வீட்டிலிருந்து இரைச்சல் ஒலி என்ற தொல்லை இல்லை.

குளிர்காலத்தில்கூடக் காற்று கதகதப்பாக இருக்கும். ஏனென்றால் வெப்பமான காற்று மேலே எழும்பும் என்கிறது அறிவியல்.

சூரிய ஒளி அதிகமாகவே வந்து சேரும். வைட்டமின் டி சத்து கேட்காமலேயே கிடைக்கும். பாக்டீரியாவின் ஆதிக்கமும் குறைவாக இருக்கும். அக்கம் பக்கத்தில் உயரமான வீடுகள் இல்லையென்றால் வெளிச்சத்தோடு காற்றும் சிறப்பாகவே வந்து சேரும். (மிக அதிகமாக காற்று வீசும் பகுதி என்றால் அதிகத் தரம் வாய்ந்த ஜன்னல்களைப் பொருத்த வேண்டியிருக்கும்).

பால்கனியிலிருந்து பார்த்தால் ‘நான் உயர்ந்த மனிதன்’ என்ற எண்ணம் வரும். அங்கிருந்து காணக்கூடிய காட்சிகள் மனதுக்கு இதமளிக்கலாம். அதிலும் ஒரு நதியையோ கடலையோ காண முடிந்தால் கிடைக்கக்கூடிய பரவசமே தனிதான். அப்படிப்பட்ட ஃப்ளாட் என்றால் வருங்காலத்தில் அதன் மதிப்பு அதிகமாக வாய்ப்பு உண்டு.

வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசைகள் மேலும் துல்லியமாகக் கிடைக்கும்.

தெருவில் ஏதாவது கலவரம் உண்டானால் பாதிப்பு உண்டாகாது. சமீபத்திய வெள்ளத்தின்போது மேல் தளங்களில் உள்ளவர்களின் பொருள்களுக்குச் சேதம் உண்டாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரையில் உள்ள ஈரப்பதம் மேல்தளங்களில் இருக்காது.

இத்தனை சிறப்புகளும் உண்டு என்றாலும் மேல் தளத்தில் ஃப்ளாட்டை வாங்குவதால் சில அவஸ்தைகளும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மொட்டை மாடியிலிருந்து வெயில் உங்கள் வீட்டுக்குள்தான் முதலில் இறங்கும். இந்தத் தாக்குதல் நிகழாமல் இருக்க மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் படலத்தில் ‘கோட்டிங்’ கொடுக்க வேண்டியிருக்கும்.

மிகவும் பெரிய, கனமான பொருள்களை மாடிக்கு எடுத்துச் செல்வது கஷ்டம். லிஃப்ட் உதவும்தான். ஆனால், அது கொஞ்சம் சிறியதாக இருந்து ஏற்றப்பட வேண்டிய பொருள் பெரியதாக இருந்தால் பிரச்சினைதான். லிஃப்ட் ஏதோ காரணத்தால் பழுதடைந்துவிட்டால் பெரும் பிரச்சினை. சொல்லப்போனால் நான்கு தளங்களைவிட அதிகம் கொண்ட கட்டிடம் என்றால் அதில் ஒரே லிஃப்ட் மட்டுமே இருப்பதுகூட ரிஸ்க்தான்.

வாசலில் காய்கறி போன்ற பொருட்களை விற்பவர் போனால் உடனே போய் வாங்கிவிட முடியாது. மேல் தளத்திலிருந்து குரல் கொடுத்தால் அவர்கள் காதில் விழ வேண்டும். அப்படி விழுந்தாலும் அவர்கள் பொறுமையுடன், நீங்கள் இறங்கிவரும்வரை காத்திருப்பார்களா?

வீட்டில் உள்ளவர்களுக்குத் திடீரெனப் பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதுகூடக் கஷ்டமாக இருக்கும்.

மேல் தளத்தில் குளிர்காலம் கதகதப்பாக இருக்கும்தான். ஆனால், கோடைக் காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அதிக ஏசி பயன்பாடு அல்லது 24 மணி நேரமும் மின்விசிறி இயக்கம் தேவைப்படும். மின்சாரக் கட்டணம் பழுத்துவிடும்.

தண்ணீர் கஷ்டம் மேலும் முற்றிப்போய் இரண்டு குடம் தண்ணீரை வாசலிலிருந்து மேல்மாடிக்குக் கொண்டுசெல்லும் காட்சியை நினைத்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது?

ஆக நன்மை, தீமைகள் இரண்டுமே உள்ளன. என்றாலும் இன்று பெரும்பாலானோரின் விருப்பம் ‘கீழ்த்தள வீடுகளை ஒதுக்கிவிடுதல்’ என்று ஆகிவிட்டது. (இருபது வருடங்களுக்கு முன் இதற்கு நேரெதிரான நிலை நிலவியது). மேல்தள வீடுகள் பலரது விருப்பமாக ஆகிவிட்டதைப் பார்த்தால் அதன் நன்மைகள், தீமைகளைவிட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றுதான் அர்த்தம்

Leave a Reply