shadow

முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான். இதற்கான காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஹார்மோன்கள்: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதனால் ‘ஆன்ட்ரோஜன்’ எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும். இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குரல் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்கட்டிகள், தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

மரபியல்: ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம். பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தவிர்க்க வேண்டியவை:

ஷேவிங்: முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

செயற்கை கிரீம்: முடிகளை நீக்க கடைகளில் கிடைக்கும் செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதால், அதிலுள்ள ரசாயனம் முகத்தில் அரிப்பு, தோல் தடிப்பு, பருக்கள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.

மேற்கொள்ளவேண்டிய இயற்கை வழிகள்: சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து, பசை போல தயாரிக்கவும். இந்தக் கலவையை, முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால், முகத்தில் வளர்ந்திருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கும்.

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சிறிதளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இதை முடி வளர்ச்சிக்கு எதிர்புறமாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பதுடன், முடிகளும் உதிர்ந்து விடும்.

ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, மஞ்சள்தூள், சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை முகத்தில் முடி வளர்ச்சி உள்ள இடங்களில் தடவி, மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால், முடி உதிர்வதுடன், வளர்ச்சியும் கட்டுக்குள் வரும்.