shadow

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன.

உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையை சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.

என்ஜினை சீராகப் பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மன அழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள், அவ்வப்போது சில நிமிடங்கள் காலாற நடை போடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் முறைப்படி பின்பற்றி வந்தால், உங்கள் இதயம் கடைசிவரை ஆரோக்கியமாகவே இயங்கும்.