shadow

மண்ணெண்ணெய் பயன்படுத்தாத மாநிலமாகியது ஆந்திரா! சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய்க்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்பது உண்டு. வசதியானவர்கள் வீடுகளில் மட்டுமே கியாஸ் சிலிண்டர் இருந்த காலத்தில் இதுபோல் நடந்தது.

ஆனால் தற்போது கியாஸ் இணைப்பு உடனுக்குடன் கிடைப்பதால் பெரும்பாலான ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தினர்களும் சிலிண்டரை பெற்றுவிட்டனர். இருப்பினும் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இன்னும் மண்ணெண்ணெய் பயன்பாடு இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘மண்ணெண்ணெய் உபயோகப்படுத்தாத மாநிலமாக ஆந்திரா உருவாகி உள்ளது. ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ‘தீபம்’ திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

இதன் விளைவாக மண்ணெண்ணெய் உபயோகம் முற்றிலுமாக இல்லை. ஆதலால் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் இனி வழங்கப்படாது. அதுமட்டுமின்றி நூறு நாள் வேலை திட்டத்தில் ஆந்திர மாநிலம் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மின் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாகவும் ஆந்திரா விளங்குகிறது. மேலும் தற்போது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் அளவு நாம் முன்னேறியுள்ளோம்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

Leave a Reply