shadow

இன்று அதிகாலை பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்தது. ரயில் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில் நிலையத்திற்கு புறநகர் பகுதிக்கு அதிகாலை 2.30 மணிக்கு வந்தது. கோண்டியாவில் ரயில் எதிர்பாராத விதமாக சரக்கு ரயிலின் பின் புறம் மோதியது.

அதிகாலை நேரம் என்பதால் சிக்னல் மற்றும் தண்டவாளத்தை கவனிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த விபத்து நடந்தது என சொல்லப்படுகிறது. பயணிகள் ரயில் சரக்கு ரயில் நிற்கும் பாதையில் செல்வதை கடைசி நேரத்தில் தான் பயணிகள் ரயிலின் மோட்டார்மேன் கவனித்தார். இதனால் எமர்ஜென்சி பிரேக் போட்டுப்பார்த்தார். ஆனாலும் பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விபத்தில் பயணிகள் ரயிலில் இருந்த 50 பேர் காயம் அடைந்தனர்.

 

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவிக்கு பிறகு 49 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிர்ச்சேதம் கிடையாது என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் ராய்பூரில் இருந்து நாக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். அதிகாலை 5.24 மணிக்கு இப்பணிகள் முடிந்தது. ரயில் கோண்டியா ரயில் நிலையத்திற்கு 5.44 மணிக்கு வந்து சேர்ந்தது. இச்சம்பவத்தால் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.