shadow

பொறியியல் மாணவர்களுக்கு மூன்று வார கட்டாய அறிமுகப் பயிற்சி: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 வார கட்டாய அறிமுகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் . அதன் பிறகே, வழக்கமான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனங்களின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் நடைமுறையில் இருக்கும் வகையிலும் மாதிரி பொறியியல் கல்வித் திட்டத்தை ஏஐசிடிஇ உருவாக்கி வருகிறது. முதல்கட்டமாக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் இரண்டு பருவங்களுக்கான கல்வித் திட்டத்தை முழுமையாக மாற்றியமைத்து, வெளியிட்டுள்ளது.

3 வார கட்டாய அறிமுகப் பயிற்சி: இதில் மாணவர்களுக்கான மூன்று வார கட்டாய அறிமுகப் பயிற்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, கல்லூரியில் புதிதாக நுழையும் மாணவர்கள் கல்லூரிச் சூழல், சக மாணவர்கள், ஆசிரியர்கள், தேர்வு செய்துள்ள துறை சார்ந்த விவரங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அச்சமற்ற தொடக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

பயிற்சியில் என்னென்ன இடம்பெறும்? அனைத்து மாணவர்களும் தினமும் காலை மற்றும் மாலையில் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபடுவது. முன்னதாக காலை 6 மணிக்கு உடற்பயிற்சி அல்லது யோகாவில் ஈடுபடுவது.

ஒவ்வொரு நாளும், வண்ணம் தீட்டுதல், இசை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது. ஒரு ஆசிரியர் , 20 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் குழுக்களாகப் பிரித்து, குழு விவாதங்களில் ஈடுபட வைப்பது.

வாரத்துக்கு ஒருமுறை பிரபல நபர்களை சொற்பொழி ஆற்ற வைப்பது.

நகரின் முக்கிய இடங்கள், மருத்துவமனை அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வது.

மாணவர்கள் தேர்வு செய்துள்ள துறை சார்ந்த தகவல்கள், சமூகத்தில் அந்தத் துறையின் பயன் குறித்து எடுத்துரைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த மூன்று வார அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பயிற்சிக்குப் பிறகே வகுப்புகள்: இந்த மூன்று வார பயிற்சிக்குப் பிறகே, வழக்கமான வகுப்புகளை பொறியியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும். மேலும், இந்தப் பயிற்சியின் போது அமைக்கப்படும் 10 மாணவர்களுக்கு ஒரு முதுநிலை மாணவர் வழிகாட்டி மற்றும் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டி என்ற அடிப்படையில் அமைக்கப்படும் குழுக்கள், மாணவர்களின் படிப்புக் காலமான 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்யவேண்டும்.

இதன் மூலம், படிப்புக் காலம் முழுவதும் கல்வி, நிதி, உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை தனது குழுவில் உள்ள மாணவர் வழிகாட்டியிடம் அல்லது ஆசிரியர் வழிகாட்டியிடம் மாணவர்கள் தயக்கமின்றி கேட்டு பயன் பெற முடியும் எனவும் ஏஐசிடிஇ மாதிரி கல்வித் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 2 நாள்கள் மட்டுமே… அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 2 நாள்கள் மட்டுமே இந்த அறிமுகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக கல்வித் திட்டக் குழு இயக்குநர் கீதா கூறுகையில், இப்போது பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 2 நாள்கள் மட்டுமே அறிமுகப் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், முதலாமாண்டு வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. எனவே, நிகழாண்டு மாற்றம் கொண்டுவர முடியாது.

எனவே, ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள மாதிரி கல்வித் திட்டம் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Leave a Reply