shadow

highcourtபெண்கள் திருமணம் ஆனாலும் அவர்கள் பிறந்த வீட்டின் உறுப்பினர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று ரஞ்சனா அனராவ் என்ற பெண் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது தாயார் ஒரு சில்லறை மண்எண்ணெய் விற்பனைக்கடை நடத்தி வந்தார். பின்னர் திடீரென அவர் இறந்துவிட்டார். எனவே, அந்த கடையை தொடர்ந்து நடத்த நான் விரும்பினேன். எனது விருப்பத்துக்கு என் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மண்எண்ணெய் கடையை நடத்த எனக்கு உரிமம் அளிக்க வேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்தேன். இருப்பினும், கடந்த 2004–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட அரசின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி எனக்கு லைசென்சு வழங்க அரசு மறுத்துவிட்டது. காரணம், அந்த தீர்மானத்தில் திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீட்டின் உறுப்பினர்கள் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு வெளியிட்ட மற்றொரு தீர்மானத்தின் மீது பணியின்போது தகப்பனார் இறந்துவிட்டால் அவரது வேலையில் திருமணம் ஆன பெண்களும் உரிமை கோரலாம் என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும், இந்த ஆண்டு (2014) மே மாதம் வெளியிடப்பட்ட தீர்மானத்தில் தியாகிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அவரது விதவை மனைவிக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு எனக்கு லைசென்சு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர், தந்தையின் மறைவுக்கு பின்னர் அவரது திருமணம் ஆன மகளுக்கு கருணை அடிப்படையில் தந்தையின் வேலை வழங்கப்படும்போது, அவர்கள் திருமணம் ஆன பின்னர் பிறந்த வீட்டின் உறுப்பினர்கள் அல்ல என்று கூறுவது முறையாகாது என்று தீர்ப்பளித்தனர். மேலும் திருமணம் ஆன பெண்களும் பிறந்த வீட்டின் உறுப்பினர்கள் தான் என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாதகமான முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply