shadow

10 பெண்களில் ஒருவர் பி.சி.ஓ.டி. எனப்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு ஆளாகிறார். ஹார்மோன் சம நிலையின்மை, வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது. கருப்பையின் சுவர்களில் நீர்க்கட்டிகள் தோன்றி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். கருப்பை நீர்க்கட்டிகள் எனப்படும் பி.சி.ஓ.டி. பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும் பற்றி பார்ப்போம்.

1. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பாதிப்புக்குள்ளாகும் அனைவரும் உடல் பருமனாக காணப்படுவார்கள். உண்மை: பி.சி.ஓ.டி நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். முகத்தில் முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவை பி.சி.ஓ.டி. பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். கருப்பையில் நீர்க்கட்டிகளின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும்.

2. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்களால் கருத்தரிக்க முடியாது. உண்மை: கருப்பையில் இருந்து கரு முட்டை வெளியேற வாய்ப்பு இல்லாத சூழலில் (அனோவுலேட்டரி) 75 சதவீதம் வரை மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான பி.சி.ஓ.டி. நோயாளிகள் கருமுட்டை சிகிச்சை மூலம் கருத்தரிக்கிறார்கள். லேசான பாதிப்பு கொண்டிருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையை சார்ந்திருக்காமலேயே கருத்தரிக்கவும் செய்கிறார்கள்.

3. கட்டுக்கதை: கருப்பையில் பல நீர்க்கட்டிகள் இருந்தால்தான் அது பி.சி.ஓ.டி. பாதிப்பு என்று உறுதி செய்யப்படும்.உண்மை: மாதவிடாயின்போது கருமுட்டைகள் வெளியேறும் அளவும், ரத்த ஓட்டமும் குறைவது, முகத்தில் அதிகப்படியான முடிகள் வளர்வது உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டே உறுதிப்படுத்திவிடலாம்.

4. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை இருக்கும். உண்மை: மாதவிடாய் சுழற்சி இல்லாதது, மாதவிடாயின்போது உதிரப்போக்கு குறைவது, மாதவிடாய் தாமதமாவது, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி நிலவுவது போன்ற பிரச்சினைகளை பி.சி.ஓ.டி. பாதிப்புக்குள்ளாகுபவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

5. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கும் முகம், மார்பு பகுதியில் முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களை போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்க வைக்கும்.உண்மை: முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு பி.சி.ஓ.டி. மட்டுமே காரணமில்லை. தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கும் முடி வளர்ச்சி ஏற்படலாம். அட்ரீனல், பிட்யூட்டரி சுரப்பிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்போதும் பாதிப்பு உண்டாகலாம்.

6. கட்டுக்கதை: அனைத்து பி.சி.ஓ.டி. நோயாளிகளும் சிகிச்சை பெற வேண்டும். உண்மை: வழக்கமான மாதவிடாய் சுழற்சி கொண்ட இளம் பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கு ஹார்மோன் சிகிச்சை தேவையில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள் அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

7. கட்டுக்கதை: பி.சி.ஓ.டி. பாதிப்புக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு கிடையாது. உண்மை: பி.சி.ஓ.டி. நோயாளிகளுக்கு இன்சுலின் தடுப்பு தன்மை உண்டு. மேலும் நீரிழிவு நோய் உருவாகும் அபாயமும் அதிகமுண்டு. இருப்பினும் அதற்குரிய தொடர்பு பற்றிய காரணம் முழுமையாக அறியப்படவில்லை.

8. கட்டுக்கதை பி.சி.ஓ.டி. பாதிப்புக்கு முறையான சிகிச்சைகள் இல்லை. உண்மை: பி.சி.ஓ.டி. நோயாளிகளை சிகிச்சை மூலம் திறம்பட கையாள முடியும். எடை குறைப்பு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் சுமார் 2 முதல் 5 சதவீதம் உடல் எடையை குறைக்கலாம். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை 21 சதவீதம் குறைக்கலாம். மது அருந்துதல், புகைப்பிடித்தல், மன அழுத்தங்கள் போன்றவை நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.