shadow

பிரிவினைவாதிகளுக்கு வெற்றி: கேட்டலோனியாவில் பாராளுமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

கேட்டலோனியா பாராளுமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது,

ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா; இதன் தலைநகர் பார்சிலோனா. வடகிழக்கு ஸ்பெயினில் வளமான பகுதியான இங்கு நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இது பெற்றிருக்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் கேட்டலோனியாவுக்கு போகிறது.

ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக திகழ வேண்டும் என்ற குரல் அங்கு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் பங்கேற்ற 90 சதவீதம் பேர் சுதந்திர கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து கேட்டலோனியா பாராளுமன்றத்தில் சுதந்திர பிரகடனத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பும் வெற்றி பெற்றது. இதை ஸ்பெயின் அரசு ஏற்கவில்லை. மேலும், கேட்டலோனியா பிராந்திய அரசை, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அரசு அதிரடியாக கலைத்து உத்தரவிட்டது,

பிராந்திய பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தலைமறைவாகி பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள நிலையிலும், கேட்டலோனியாவின் முன்னாள் அதிபர் கார்லஸ், தனிநாடு கோருவோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அங்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியாக திரண்டு வந்து வாக்களித்தனர். தேர்தல் நடந்து முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மொத்தம் உள்ள 135 இடங்களில் தனிநாடு பிரிவினையாளர்களின் கட்சிகள் 70 இடங்களில் வெற்றி பெற்றன. இதில், முன்னாள் அதிபர் கார்லஸ்சின் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள், தலைமறைவாக உள்ள முன்னாள் அதிபர் கார்லஸ் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த தேர்தல் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர், பார்சிலோனா முழுவதும் சுதந்திரத்துக்கு ஆதரவான பேரணிகள் நடைபெற்றன. அதில் கார்லஸ்சின் ஆதரவாளர்கள், “அதிபர் கார்லஸ் வாழ்க” என உற்சாகத்துடன் குரல் எழுப்பினர்.

அதே நேரத்தில் அவர் மீது அரசு வக்கீல்கள் தேசத்துரோக குற்றம் சாட்டி உள்ளனர். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் அவருடைய செய்தி தொடர்பாளர் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “நாங்கள் மீண்டும் (ஆட்சி அதிகாரத்துக்கு) வருகிறோம்” என குறிப்பிட்டார்.

தனது 4 முன்னாள் சகாக்களுடன் அமர்ந்து கொண்டு கார்லஸ் வெளியிட்டுள்ள டி.வி. உரையில், “ஒன்று ரஜோய் தன்னை மாற்றிக்கொள்ளட்டும். இல்லையேல் நாங்கள் நாட்டை மாற்றுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் “பந்து மீண்டும் ரஜோய் களத்தில் தான் இருக்கிறது, அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply