shadow

பள்ளி, கல்லூரியில் நுழையும் பிள்ளை… பெற்றோருக்கு டென்ஷன் இல்லை!
college
இந்தக் கல்வியாண்டு… இனிதே ஆரம்பமாகியிருக்கிறது. ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு புரமோஷன் வாங்கிச்செல்லும் மாணவர்களின் இல்லங்களைவிட, முதல் முறையாக தங்கள் குழந்தையை பள்ளியிலும், முதல் தலைமுறையாக தங்கள் பிள்ளையை கல்லூரியிலும் சேர்க்கவிருக்கும் பெற்றோர்கள் அதிக பதற்றத்துடன் இருப்பார்கள்.

கல்லூரியில் நல்ல நண்பர்கள் இவனுக்கு அமைவார்களா, கெட்ட சகவாசம் பழகிவிடுவானா என்று அஞ்சுபவர் களுக்கும், ஒரு பெற்றோராக அவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்தும், எல்.கே.ஜி-யில் சேர்ந்திருக்கும் மகள் பள்ளியில் ஒழுங்காகச் சாப்பிடுவாளா, ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்பாளா, மற்ற குழந்தைகளோடு அட்ஜஸ்ட் செய்துகொள்வாளா என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள் மனநல மருத்துவர் டாக்டர் அபிலாஷா மற்றும் குழந்தை மனநல மருத்துவர் டாக்டர் யமுனா.

அதிக கற்பனை ஏற்படுத்தாதீர்கள்!

“பன்னிரண்டாம் வகுப்புவரை பெற்றோர், ‘இப்போ கஷ்டப்பட்டு படிச்சுடு… காலேஜ்ல லைஃப்ல ஜாலியா இருக்கலாம்’ என்று கூறியே பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள். இதுதான் அவர்கள் செய்யும் முதல் தவறு. இது கல்லூரி என்பதை கொண் டாட்டத்துக்கான ஓர் இடமாக பிள்ளைகள் மனதில் பள்ளி நாட்களில் இருந்தே ஆழமாகப் பதியவைக்கிறது. கல்லூரி சென்றதும், மடை திறந்த வெள்ளம்போல் முழு சுதந்திரத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, ‘கல்லூரியில் ஃப்ரீயா இருக்கலாம்’ என்று பிள்ளைகளிடம் சொல்லிவைப்பதை பெற்றோர் கைவிட வேண்டும்.

இன்னொரு பக்கம், நீங்கள் சொல்லவில்லை என்றாலும், கல்லூரி சென்றதுமே அந்த கலர்ஃபுல் உலகத்தில் அவர்களுக்கு சுதந்திர சிறகுகள் முளைத்துவிட்டதாகவும், ‘காலேஜ் வந்தாச்சு, இனி அப்பா, அம்மாவுக்கு கட்டுப்பட, பயப்படத் தேவையில்ல’ என்றும் உணர ஆரம்பிப்பார்கள். அந்த எண்ணங்களுக்கு கடிவாளம் இடுங்கள். `அப்படி புதிதாக எந்தச் சுதந்திரமும் அவர்கள் அடைந்துவிடவில்லை; அவர்கள் இன்னமும் உங்களைச் சார்ந்துதான் இருக்கிறார்கள், மேலும் அவர்கள் குணத்திலும் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும்தான் இருக்கிறது சந்தோஷமும் கௌரவமும்’ என்பதை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.

நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சிகரெட் பிடிக்கப் பழகுவது, தோழிகளுடன் சேர்ந்துகொண்டு `பப்’ செல்லப் பழகுவது என்று, கல்லூரிக் காலம் பல தவறுகளுக்கும் தொடக்கப்புள்ளி வைத்துக்கொடுக்கும். எனவே, வீட்டில் அவர்களுடனான இயல்பான உரையாடலில், ‘காலேஜ் பசங்க இப்படியெல்லாம் பண்றாங்களாம். நான் கேள்விப்பட்டதும் பதறிட்டேன். ஆனா, உன் மேல நான் நிறைய நம்பிக்கை வெச்சிருக்கேன். நீ அதில் இருந்து எல்லாம் விலகி இருப்பனு எனக்குத் தெரியும்’ என்று பிள்ளை குறித்த உங்களின் நம்பிக்கையை முன்னிறுத்தி பாசிட்டிவாகப் பேசுங்கள். மாறாக, ‘நீ மட்டும் சிகரெட் பழகினேனு தெரிஞ்சது…’ என்ற கண்டிப்போ, மிரட்டலோ வேண்டாம்.  

பிள்ளைகள் செலவுக்குப் பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால் கட்டாயம் கணக்குக் கேளுங்கள். சொல்லப்போனால், அவர்களை செலவுக் கணக்கு எழுதப் பழக்குவது இன்னும் சிறந்தது. இது அவர்களுக்கு ஒரு பழக்கமாக அமைவதுடன், அவர்களின் செலவு பற்றி நீங்களும் அறிந்துகொள்ள கைகொடுக்கும்.

செல்ஃபோன், லேப்டாப் போன்றவற்றில் மிகவும் விலை அதிகமானவற்றை வாங்கித்தர வேண்டாம். அது தொலைந்துவிட்டால், வீட்டுக்குப் பயந்து திருட்டு வேலையிலோ அல்லது வேறு தவறான வழியிலோ தொலைத்த பொருளுக்கான பணத்தை சம்பாதிக்க அவர்கள் திசைதிரும்பிவிடும் சம்பவத்துக்கு, நீங்களே பிள்ளையார்சுழி போட்டுக்கொடுக்காதீர்கள்.

உங்கள் குடும்பச் சூழலை அடிக்கடி பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். ‘நீ ஒழுங்கா படிக்கலைன்னா, குடும்பமே கரையேற முடியாது’ என்று அவர்களுக்கு அழுத்தம் தரும் வார்த்தைகள் தவிர்த்து, ‘நம்ம கஷ்டமெல்லாம், நீ நல்ல வேலையில் சேரும்வரைதான்’ என்று அவர்கள் பொறுப்பை நாசூக்காக உணர்த்தும் வகையில் பேசுங்கள்.

பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை, ஆடைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மாடர்னாக உடுத்தலாம். கவர்ச்சியும் காஸ்ட்லியும் வேண்டாம். மேலும், எங்கேயும் எப்போதும் அவர்களுக்கான மதிப்பைப் பெற்றுத் தருவது கண்ணியமான ஆடைகளே என்பதையும் ஃப்ரெண்ட்லியாகப் பேசிப் புரியவையுங்கள்.

கிராமம் டு ஹாஸ்டலா?

கிராமத்திலிருந்து நகரத்துக்குப் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும்போது, அவர்களிடம் கல்லூரி பற்றி நீங்கள் கேட்ட, பார்த்த கசப்பான அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துவிட்டு, ‘நீ பத்திரமா இருந்துக்கோ’ என்று சொல்லி அனுப்பாதீர்கள். ஏற்கெனவே ஊர்விட்டு வந்த சோகத்தை மனதில் சுமந்திருக்கும் அவர்களுக்கு, இந்த பயமுறுத்தல்கள் கல்லூரிச் சூழலை அந்நியமாக்கிவிடும்.

கிராமத்துப் பிள்ளைகள் நகரங்களின் ஆடம்பரத் தோற்றத்தில் முதலில் மிரண்டுதான் போவார்கள். தவிர, பேச்சில் இருந்து உடைவரை ‘ஊர்க்காரப் புள்ள’ என்ற கேலிக்கும் ஆளாவார்கள். அதையெல்லாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய தன்னம்பிக்கையை உங்கள் பிள்ளைகளுக்குத் தந்து அனுப்புங்கள். `எந்த சந்தர்ப்பத்திலும், நகரத்துக்காக போலியாக அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை, கலாசாரம்தான் பலம்’ என்று வலியுறுத்துங்கள்.

ஆரம்ப நாட்களில் ஹோம்சிக்கில் அவர்கள் தவிப்பது இயல்புதான். அப்போது ‘அய்யய்யோ, இப்படி அழறாளே… பேசாம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுவோமா?’ என்று நீங்களும் பதறாமல், ‘எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நம்ம பக்கத்து வீட்டு மலர்கூட இப்படித்தானே முதல்ல அழுதா…’ என்று சமாதானம் சொல்லுங்கள்.

முதல் செமஸ்டரில்தான் ஹோம்சிக் எல்லாம். இரண்டாவது செமஸ்டரில் அவர்கள் சகஜமாகிவிடுவார்கள். ஆனால், எப்போதும் அவர்கள் உங்கள் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கட்டுப்பாடான விடுதி, லோக்கல் கார்டியன், அவுட்டிங் பாஸ் என்று அனைத்திலும் கவனமாக இருங்கள்.

மொத்தத்தில், கல்லூரி சென்றாலும் கனிவான கட்டுப்பாடு தொடரட்டும் பிள்ளைகளை!’’ என்று வலியுறுத்தினார் அபிலாஷா.

எல்.கே.ஜி-யில் சுட்டி… பெற்றோர் மனதில் `பக் பக்’!

முதன் முதலாக பள்ளியில் குழந்தையைச் சேர்க்கும் பெற்றோர்களுக்கு ஆலோசனை தருகிறார் குழந்தை மனநல மருத்துவர் டாக்டர் யமுனா.

 ‘‘பிறந்ததிலிருந்து கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தையை முதன் முதலில் பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோருக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. அதேபோல, குழந்தை இந்த வயதில் பள்ளிச் சூழலுக்குப் பழகிக்கொள்வதும் இயற்கையாகவே நிகழ்ந்துவிடும்.

 அதற்காக முதல் நாளே குழந்தை அழாமல் `டாடா’ காட்ட வேண்டும், ஆசிரியர் சொல்வதைக் கேட்க வேண்டும், லஞ்ச் பாக்ஸை காலி செய்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள். ஒன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குள் இவையெல்லாம் நடக்கும். பொறுமையுடன் இருங்கள்.

 குழந்தைகள் பள்ளியில் ஆசிரியர்களிடம் நன்றாகப் பேச வேண்டும், முதலில் அவர்கள் வீட்டிலும் பெற்றோர் தவிர்த்து மற்றவர்களிடம் பேசிப் பழகியிருக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் பேசி, குழந்தைகளையும் அவர்களிடம் இயல்பாக பேசவையுங்கள். வீட்டுக்கு யாராவது பெரியவர்கள், உறவினர்கள் வந்தால், அவர்களிடம் பேச உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் பேசும்போது ‘இதைச் சொல்லு, அதைச் சொல்லு’ என்று குறுக்கிடாதீர்கள். அவர்களாகவே பேசட்டும். அப்படிப் பேசும் பழகும் குழந்தைகள்தான், பள்ளியிலும் மனத்தடைகளின்றி பேச ஆரம்பிக்கும். டி.வி, மொபைல், `ஐபேட்’ உடன் மட்டுமே குழந்தைகளை ‘பழக’விட்டால் பேச்சு எங்கிருந்து வரும்?!

 உங்கள் குழந்தை, சக குழந்தையின் ஸ்லேட், பென்சிலை விரும்பி எடுத்துவந்துவிட்டால், திட்டாதீர்கள்… அடிக்காதீர்கள். ‘இது கெட்ட பழக்கம். உன் ஃப்ரெண்ட் பாவம்ல… அவன் அழுவான்ல..? நாளைக்குக் கொடுத்துடு. இனிமே எடுக்காத’ என்று பொறுமையாகப் புரியவையுங்கள்.

 சில குழந்தைகள் பள்ளியில் கெட்ட வார்த்தை பழகிவருவார்கள். அதற்காக மற்ற குழந்தைகளுடன் பழகவிடாமல் இருப்பது முட்டாள்தனம். ‘இந்த வார்த்தை எல்லாம் நம்ம வீட்டுல யூஸ் பண்ண மாட்டோம். நீ உன் ஃப்ரெண்ட்கிட்டயும் இதெல்லாம் பேடு வேர்ட்ஸ்னு சொல்லு’ என்று எடுத்துச் சொல்லுங்கள்.

 ஆங்கிலம் பழக்க… கதை புத்தகங்களை வைத்துக்கொண்டு, படங்களைக் காட்டி, சிம்பிள் இங்கிலீஷில் அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். நாளடைவில் பேசுவார்கள்.

 மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசுவது கூடவே கூடாது. ‘நீ செஞ்ச பூரி நல்லாவேயில்ல. என் ஃப்ரெண்ட் கொண்டுவந்த பூரி சூப்பரா இருந்தது’ என்று சொன்னால், அம்மாவாலேயே தாங்க முடியாது எனில், குழந்தைகளின் மனதை ஒப்பீடு எந்தளவுக்குக் காயப்படுத்தும் என்று சிந்தியுங்கள்’’ என்று வழிகாட்டினார், டாக்டர் யமுனா.  

பிள்ளை எல்.கே.ஜி சேர்ந்தாலும், கல்லூரி போனாலும்… ‘முதன் முதலாய்’ அனுபவம் மகிழ்ச்சியானதாக அமைய வாழ்த்துகள்!

Leave a Reply