shadow

பயோ கேஸ் பஸ் வருங்காலத்தை ஆக்கிரமிக்குமா?

சுற்றுச் சூழலைக் காப்பதோடு கோவாவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளைக் காக்கும் விதமாக பயோ கேஸ் மூலம் இயங்கும் பஸ்களை இயக்க கோவா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சோதனை முயற்சியாக முதலில் மூன்று முதல் 6 மாதங்களுக்கு இத்தகைய பஸ்களை இயக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இத்தகைய பஸ்கள் யூரோ – 6 புகை மாசு சான்றிதழ் விதிகளுக்கு உள்பட்டவை. இந்தப் பிரிவில் யூரோ -6 விதிகளை பூர்த்தி செய்து பொது போக்குவரத்துக்கு வரும் முதலாவது வாகனம் இதுவாகத்தானிருக்கும். பயோ கேஸ் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் இந்த பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிசம்பர் முதல் வாரத்தில் கோவா சாலைகளில் இத்தகைய பஸ்கள் இயக்கப்படலாம் என தெரிகிறது.

சுதந்திர தினத்தின்போது கோவாவில் இந்த பஸ்கள் ஒரு நாள் இயக்கப்பட்டன. இத்துடன் எத்தனாலில் இயங்கும் பஸ்களும் இயக்கப்பட்டன. பயோ கேஸில் இயங்கும் இத்தகைய பஸ்களை இயக்குவதற்காக தயாரிப்பு நிறுவனமான ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்கானியாவுடன் கோவா மாநில போக்குவரத்து கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சோதனை ஓட்டத்தின்போது இந்த பஸ்களின் செயல்பாடுகளை முதல்வர் அலுவலகம் கண்காணிக்கும். சர்வதேச தரத்திலான பஸ்களை கோவா சாலைகளில் இயக்கச் செய்வதே மாநில அரசின் நோக்கம். அந்த வகையில் ஸ்கானியா நிறுவனத்தின் பயோ கேஸ் பஸ்கள் கோவா அரசின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே தோன்றுகிறது.

இந்த பஸ்களை தயாரித்த ஸ்கானியா நிறுவனமே இவற்றை இயக்கும். இதற்காக அரசு ஒரு பைசா கூட செலவிடாது. இந்த பஸ்களை இயக்குவதற்கான டிரைவர்களையும் ஸ்கானியா நிறுவனமே அளிக்கிறது. எரிபொருளையும் ஸ்கானியா நிறுவனமே அளிக்கும். அத்துடன் பஸ் பராமரிப்பையும் இந்நிறுவனமே மேற்கொள்ளும். பயண டிக்கெட் மூலம் வசூலாகும் தொகையை மட்டும் ஸ்கானியா நிறுவனம் எடுத்துக் கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோல்ஹாபூரில் உள்ள நிறுவனத்திடமிருந்து இந்த பஸ்ஸுக்குத் தேவையான பயோ கேஸ் பெறப்படுகிறது. இது 96 சதவீத தூய்மைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்நிறுவனத்துடன் ஸ்கானியா ஒப்பந்தம் செய்து பயோ கேஸை பெறுகிறது.

கோவாவின் வடக்குப் பகுதி நகரான சாலிகோவில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்று திடக் கழிவு மேலாண்மை மூலம் பயோ கேஸை தயாரிக்கிறது. ஆனால் இது யூரோ – 6 தகுதிச் சான்று பெற்ற நிறுவனங்களுக்கு ஏற்றதல்ல. இந்த ஆலையில் யூரோ-6 வாகனங்களுக்குத் தேவையான பயோ கேஸை உற்பத்தி செய்ய கூடுதலாக ரூ.10 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. இங்கு தரமான பயோ கேஸ் உற்பத்தி செய்யப்பட்டால் இதன் மூலம் 50 பஸ்களுக்கு தேவையான பயோ கேஸை உற்பத்தி செய்யமுடியும். ஒவ்வொரு பஸ்ஸும் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் திறன் பெற்றவையாகும்.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் ஸ்கானியா நிறுவனத்துடன் 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. சூழல் காப்பில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழப் போகிறது கோவா.

Leave a Reply