shadow

பன்னிரு ராசிகளும் பரிவார தெய்வங்களும்!
எந்த ஒரு கோயிலாக இருந்தாலும், மூலவருடன் பரிவார தெய்வங்களும் கோஷ்ட மூர்த்தங்களாகவும், தனிச் சந்நிதி தெய்வங்களாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை நாம் தரிசிக்கலாம்.

சிவாலயங்களில் பைரவர், துர்கை, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், மகா விஷ்ணு, லிங்கோத்பவர், முப்பெருந்தேவியர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள்பாலிப்பார்கள்.

அதேபோல், பெருமாள் கோயில்களில் அனுமன், விஷ்வக்சேனர் முதலான தெய்வங்களும், முருகப்பெருமான் மற்றும் அம்மன் ஆலயங்களில் அவர்களுக்கான பரிவார தெய்வங்களையும் தரிசித்திருப்போம்.

இந்தப் பரிவார தெய்வங்கள், நம் இன்னல்களை நீக்கி இன்னருள் புரிந்து, நமது கஷ்டங்களுக்கெல்லாம் பரிகாரம் அருளும் தெய்வங்களாகவும் அருள்பாலிக்கிறார்கள்.

பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களுக்குள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதி, அந்த ராசிக்குள் இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிபதி என்று தெய்வங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்களும், தத்தமது ராசிக்கு உகந்த பரிவார தெய்வங்களை வழிபட்டு வரம் பெற்று மகிழலாம்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ராசி அதிபதிக்குரிய தெய்வம் முருகப்பெருமான். ஆக, இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் வழிபடலாம்.

இந்த ராசியைச் சேர்ந்த அசுவினி நட்சத்திரக்காரர்கள், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தேங்காயும் வெல்லமும் கலந்து செய்த மோதகத்தை நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறந்த பரிகாரம்.

பரணி நட்சத்திரக்காரர்கள், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்காதேவிக்குச் செவ்வரளிப்பூ மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், ஞாயிறன்று சூரிய பகவானுக்குச் செம்பருத்தி மாலை அணிவித்து, வெல்லம், கோதுமை, பால் சேர்த்து செய்த பொங்கலை நைவேத்தியம் செய்தும், பிரதோஷ காலத்தில் நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, சிவப்பரிசியும் வெல்லமும் கலந்த காப்பரிசி நைவேத்தியம் செய்தும் வழிபடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். ராசி அதிபதிக்குரிய தெய்வம் மகாலட்சுமி. எனவே, இந்த ராசிக்காரர்கள், இந்த தெய்வங்களை வழிபடுவதால் சுக்ரயோகம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், கிருத்திகை நாள்களில் கார்த்திகேயக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்கு வெள்ளரளி மாலை அணிவித்து, கற்கண்டு பொங்கல் படைத்து வழிபட வேண்டும். அதேபோல், ரோகிணி நட்சத்திரத்துக்கு உரிய கடவுளான பிரம்ம தேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானுக்குச் செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். நட்சத்திரத்துக்குரிய தெய்வமான சந்திரனை வழிபடுவதால் சந்தோஷம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு அதிபதி புதன். உரிய தெய்வம் விஷ்ணு. மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் புதனுக்கு பச்சை வஸ்திரம், மருக்கொழுந்து மாலை சாத்தி, பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். புதன்கிழமைகளில் மகா விஷ்ணுவுக்குத் துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் பகவானுக்குச் செந்நிற வஸ்திரமும், செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபட வேண்டும். பௌர்ணமி தினங்களில் வெள்ளரளி மலர்களால் சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், ராகு பகவானுக்கு மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து, கறுப்பு உளுந்தும் வெல்லமும் சேர்த்து செய்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம். பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி, உளுந்தினால் செய்த வடையை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள், குரு பகவானை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய தெய்வம் அம்பிகை. இந்த ராசிக்காரர்கள் சந்திரனுக்கு வெண்பட்டு, கற்கண்டு சாதம் சமர்ப்பித்து வழிபடுவதுடன், திங்கட்கிழமைகளில் அம்பிகைக்குக் குங்குமார்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குரு தரிசனம் செய்வது சிறப்பு. மேலும், பிரம்ம தேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானுக்கு கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நீலநிற மலர்களால் அர்ச்சனையும் எள்ளுச் சாதம் நைவேத்தியமும் செய்து வழிபடுவது நன்மை தரும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு மருக்கொழுந்து கொண்டு அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் நாகர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிவனாரையும், ராசியாதிபதியான சூரியனையும் வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும். இவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து, செம்பருத்தி மலர்களால் அர்ச்சனையும், கோதுமை ரவையுடன் பாலும் சர்க்கரையும் கலந்து செய்த பாயசம் நைவேத்தியமும் செய்து வழிபடலாம். அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

இந்த ராசியைச் சேர்ந்த மகம் நட்சத்திரக்காரர்கள், சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, மோதகம் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். நட்சத்திரத்துக்குரிய சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை, பால் பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

பூரம் நட்சத்திரக்காரர்கள், சுக்கிரனுக்கு மொச்சைப் பயறு சுண்டல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனையும் பாலன்னம் நைவேத்தியமும் செய்து வழிபடலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்கள், ஞாயிறன்று ராகு காலத்தில் வீரபத்திரர் அல்லது சரபமூர்த்திக்கு இளநீர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. கன்னி ராசியில் பிறந்தவர்கள், புதன் பகவானுக்கு மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்து, பச்சைப் பயறு பாயசம் நைவேத்தியம் செய்தும், விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுவது விசேஷம்.

இந்த ராசியில், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானை வழிபடுவதுடன், வீரபத்திரர் அல்லது சரபேஸ்வரருக்குப் பன்னீர் அபிஷேகம் செய்து, எலுமிச்சைச் சாதம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

அஸ்தத்தில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குப் பால் அபிஷேகமும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட வேண்டும். அதேபோல், நட்சத்திரத்துக்குரிய ஸ்ரீகாயத்ரி தேவிக்கு வெண் பட்டு அணிவித்து, பாலன்னம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

சித்திரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் அங்காரக பகவானுக்குச் செந்நிற வஸ்திரம் சாத்தி, துவரம்பருப்பும் அரிசியும் சேர்த்து செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்குத் துளசி மாலை அணிவித்து, தயிரன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது அளவற்ற நன்மைகளைத் தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு முல்லை மலர் அணிவித்தும், கஜலட்சுமிக்குச் செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்தும் வழிபட்டால் நன்மைகள் பெருகும். இந்த ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், செவ்வாய் பகவானுக்குச் செவ்வரளி மாலை அணிவித்து, துவரம்பருப்பு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.

சுவாதியில் பிறந்தவர்கள், செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் துர்கை அல்லது காளிதேவிக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவும். அதேபோல், சனிக்கிழமைகளில் நரசிம்ம மூர்த்திக்குப் பானகம் நைவேத்தியம் செய்து வழிபடுவது அளவற்ற நன்மைகளை அருளும்.

விசாகத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் பிரம்ம தேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, மஞ்சள் சாமந்தியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். விசாக நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகமும், ரோஜா மலர்களால் அர்ச்சனையும் செய்து வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வரும் நாளில் சண்முகருக்குப் பாலாபிஷேகம் செய்து, பஞ்சாமிர்தம் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.

இந்த ராசியில் விசாகத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு, மஞ்சள் ஆடை சாத்தி, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். அதேபோல், அனுஷம் நட்சத்திரம் வரும் நாளில் ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால் நன்மை உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் மகா விஷ்ணுவுக்குத் துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. அத்துடன் ஸ்ரீவராகமூர்த்தியைத் தரிசித்து வழிபட, வெற்றிகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் சாமந்தியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. பிரம்மதேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.

இந்த ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, மோதகமும் சுண்டலும் நைவேத்தியம் செய்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்.

பூராடத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்குச் செந்தாமரை மாலை அணிவித்தும், பாலன்னம் நைவேத்தியம் செய்தும் வழிபடுவது விசேஷம். வீரபத்திரர் வழிபாடும் நன்மை தரும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மதேவருக்குக் கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பாலும், கோயில் பிராகாரத்தில் கன்னி மூலையில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலையும் சுண்டலும் சமர்ப்பித்து வழிபடுவது நன்மை தரும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் மகா கணபதிக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, மோதகமும், சுண்டலும் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. நவகிரகங்களில் சனி பகவானுக்குக் கறுப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளன்னம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

இந்த ராசியில், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி வரும் நாளில் விநாயகருக்கு அபிஷேகம் செய்து, எள்ளும் வெல்லமும் சேர்த்து செய்த மோதகத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

திருவோணத்தில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். புதன்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு தயிரன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

அவிட்டத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மகா விஷ்ணுவுக்குத் துளசி தளத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து, நீலநிற மலர்களால் அர்ச்சனை செய்து, எள் சேர்த்த தயிரன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வடை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம்.

அவிட்டத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், புதன்கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி தளத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.

சதயத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் காளிதேவிக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபடலாம். காலசம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதாலும் நன்மைகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, சாமந்தி மலர்களால் அர்ச்சனையும் கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள், வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் சாமந்தி மாலையைச் சமர்ப்பித்து வழிபடுவதுடன், பிரம்ம தேவருக்கு மஞ்சள் காப்பு சாத்தி, பொன்னிற மலர்களால் அர்ச்சனையும், பால் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபடுவது நன்மை தரும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவகிரகங்களில் குரு பகவானை வழிபடுவதுடன், திங்கட்கிழமைகளில் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, சிவப்பரிசியும் வெல்லமும் கலந்த காப்பரிசி நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும். திங்கட்கிழமைகளில் லிங்கோத்பவ மூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நன்மை தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் பெருமாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்தால் அர்ச்சனையும், பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியமும் செய்து வழிபடலாம்.

Thanks to Vikatan.com

Leave a Reply