shadow

நெட்வொர்க் முடக்கம்: ஏர்செல் நிறுவனம் அளித்திருக்கும் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏர்செல் சேவை திடீரென முடக்கப்பட்டுள்ளதால் ஆத்திரம் அடிந்துள்ள வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏர்செல் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், ஏர்செல் நிறுவனத்தின் டவர்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் நிலுவை உள்ளதால் சிக்னல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் செல்போன் டவர்களில் 6,500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் டவர் வைத்திருக்கும் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய சங்கர நாராயணன், இந்த பிரச்னை ஒரு வாரத்துக்குள் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகக் கூறினார். கடந்த சில நாட்களில் மட்டும் ஒன்றரை கோடியாக இருந்த தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தற்போது, ஒன்றேகால் கோடியாக குறைந்துவிட்டதாகவும் சங்கரநாராயணன் குறிப்பிட்டார்.

இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டதையடுத்து ஒரே நாளில் 8 லட்சதிற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் சேவைக்கு மாற விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட இடங்களில் நெட்வொர்க் முடங்கியதாலும், நெட்வொர்க் சேவைநிறுத்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதாலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 லட்சதிற்கும் அதிகமானோர் வேறு நெட்வொர்க் சேவைக்கு மாறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வளைதளங்களில் வெளியான செய்தி குறித்து விளக்கமளித்துள்ள ஏர்செல் நிறுவனம், எதிர்பாராமல் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக சேவை வழங்குவதில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஏர்செல் நிறுவனம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இப்பிரச்னை ஓரிரு நாட்களில் சரிசெய்யப்பட்டு மீண்டும் சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை விட வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும், நெட் ஒர்க் பிரச்னை காரணமாக MNP மூலம் யாரும் மாறத்தேவையில்லை என்றும், தங்களது எண்ணை வேறொரு எண்ணுக்கு கால்டைவர்ட் மூலம் மாற்றிக்கொள்வதன் மூலம் இன்கம்மிங் சேவையை தொடர்ந்து பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply