shadow

மதுரை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்ப்பதற்கான நவீன வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து சிபிஐ மற்றும் சிபிசிஐடி பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைதரகராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரஷித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்டவைகளை தவிர்க்கும் வகையில் சிபிஐ-யை எதிர்மனு தாரராக சேர்த்து நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது. அத்துடன் கடந்த விசாரணையின் பொது நீட் தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டத்தை தடுக்க எவ்விதமான முறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் கேட்கப்பட்டது.

இந்த மனு நேற்று மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீட் தேர்வின் ஒவ்வொரு தேர்வறையையும் வீடியோ பதிவு செய்வது, கண் விழித்திரை பதிவு, விண்ணப்பிக்கும் போது கைரேகை பதிவு உள்ளிட்ட நவீன முறைகளை நடைமுறைப்படுத்தலாம் என்றார். இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் சிபிசிஐடி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.