shadow

நிதி நிலைமை மோசமாக இருப்பதால் ஏர் இந்தியாவை யாரும் வாங்க மாட்டார்கள்: விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து
air india
ஏர் இந்தியாவின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், அந்த நிறுவனத்தை மத்திய அரசு விற்க முன்வந்தாலும் அதனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் இருக்கிறது. அதனால் இந்த நிறுவனத்தின் பங்கு களை விலக்கிகொள்ள முடியாது. இது சிறப்பான விமான நிறுவனம். ஆனால் இந்த நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் ஒரு குழுவாக பணி யாற்ற வில்லை என்பது என் எண்ண மாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருந்தது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு திசையில் பயணித்தனர். இப்போது யாரும் காலத்தை பின்னோக்கி சென்று மாற்ற முடியாது. அதே சமயத்தில் இந்த நிறுவனம் நலிவடைந்து வரு கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

பொருளாதார சூழல் சரியில்லாததால் நிறுவனத்தின் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. அதிலிருந்து இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த நிதி ஆண்டில் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை செயல்பாட்டு லாபம் கிடைத்த தாக கூறப்பட்டாலும் இதுவரை முறையாக அறிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையின் தேவை உயர்ந்து வருவதால் அடுத்த 4 வருடங்களில் மேலும் 100 விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரலில் 11.98 லட்சம் பயணிகள் ஏர் இந்தியாவில் பயணித்திருக்கிறார்கள். மொத்த சந்தையில் 15.1 சதவீதம் ஏர் இந்தியா வசம் உள்ளது.

எடையை குறைக்க அவகாசம்

ஏர் இந்தியாவின் செயல்பாடு கள் ஒரு புறம் இருக்க, விமான பணியாளர்களின் எடையை குறைக்க 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான பணியாளர்களில் குறைந்த பட்சம் 100 நபர்கள் அதிக எடையில், பறப்பதற்கு தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஏர் இந்தியாவின் தலைவர் அஷ்வனி லோஹானி மற்றும் ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கருத்து ஏதும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மத்திய விமான போக்குவரத்து இயக்குநகரத்தின் (டிஜிசிஏ) படி விமான நிறுவனங்கள் விமான பணியாளர்களின் எடை குறித்த விதிமுறைகள் வைத்துள்ளன. அதனை ஏர் இந்தியாவும் பின்பற்ற முடிவெடுத்திருக்கிறது. இதில் கேள்வி கேட்க ஒன்றும் இல்லை என்று கூறினார்.

டிஜிசிஏ விதிமுறைகளின் படி அதிக எடை இருக்கும் பட்சத்தில் விமானத்தில் பறக்க முடியாது. அதே சமயத்தில் 18 மாதங்களுக்கு விமான நிலையத்தில் பணியாற்ற லாம். 18 மாதங்களுக்கு பிறகும் அதிக எடை இருக்கும் பட்சத்தில் பணி நீக்கம் செய்ய முடியும்.

இந்த விதியை பயன்படுத்தி கடந்த வருடம் 125 நபர்களை பணி நீக்கம் செய்தது. ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியது.

Leave a Reply