shadow

நல்லன எல்லாம் அருளும் வெள்ளிமலை முருகன்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகில், மரகதப் பாய் விரித்ததுபோன்று பசுமை போர்த்தி காட்சி தரும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், இயற்கை எழிலார்ந்த வெள்ளிமலையில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

வெள்ளிமலை முருகன் கோயில் பற்றி, கோயில் நிர்வாகப் பணிகளை முன்னின்று கவனித்துவரும் செந்தில் என்பவரிடம் பேசினோம்.

‘‘இந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே முருகப்பெருமானின் வேல் இருந்துவந்தது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு தோன்றிய சின்னாண்டி சித்தர் என்பவர்தான், இங்கேயே தங்கி இருந்து வேலுக்கு வழிபாடும், தவமும் மேற்கொண்டார் அந்த வேலைத்தான் சின்னாண்டி சித்தரின் முன்னோர்கள் காலம்காலமாக வழிபட்டு வந்தார்களாம். சின்னாண்டி சித்தரே இந்த இடத்தில் வேலுக்குக் கூரையால் ஒரு கோயில் கட்டினார். பின்னர் தண்டபாணி கடவுளுக்கும் கோயில் எழுப்பினார்” என்றார்.

சற்று கீழே உள்ள கோயிலில் விநாயகர், வள்ளி – தெய்வானை சமேத ஆறுமுகக் கடவுள், சிவபெருமான், நவகிரகச் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

அருகிலேயே வெள்ளைச்சாமி என்பவரின் வேண்டுதலின்படி இடும்பனுக்கும் ஒரு கோயில் அமைந்துள்ளது. சின்னாண்டி சித்தர் தவம் புரிந்த இடம், `சித்தர் குருபீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சின்னாண்டி சித்தரின் நீண்டு வளர்ந்த தலைமுடி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் சித்தரின் தலைமுடியை மலையில் உள்ள கிணற்றில் நனைத்து உலர்த்துகிறார்கள்.

இந்தக் கோயிலின் சிறப்பு விழா, பங்குனி உத்திரத் திருவிழாதான். பூக்குழி இறங்கும் வைபவத்துடன் துவங்கும் விழா, காவடி பிரார்த்தனைகள், இரண்டாம் நாள் பூப்பல்லக்கு, நிறைவு நாளில் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா என மூன்று நாள்கள் களைகட்டுகிறது.

சின்னாண்டி சித்தர் தம்மைத் தேடி வருபவர்களுக்கு, இல்லை என்று சொல்லாமல் உணவு கொடுத்து வந்தவர். அதைப் போற்றும் வகையில், பங்குனி உத்திரத் திருவிழா முடிந்த பிறகு, ஐந்து நாள்களுக்குள் ஒரு நாளில் ஊரார் ஒன்றுசேர்ந்து, சின்னாண்டி சித்தருக்கு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.

இந்தக் கோயிலில் எலுமிச்சை வழிபாடு பிரசித்தி பெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர், உடல்நலம் இல்லாதவர்கள் ஐந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வர வேண்டும். அவற்றை சித்தரின் பாதத்தில் வைத்து தீபாராதனை காட்டி, ஒரு பழத்தை எடுத்து சாறு பிழிந்து பக்தரின் தலையில் தேய்த்துவிடுவார்கள். பிறகு, கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, ஈர ஆடையுடன் கோயிலை வலம் வர வேண்டும். பின்னர் கோயிலில் கொடுக்கும் இரண்டு எலுமிச்சை பழங்களை வீட்டுக்கு எடுத்து சென்று ஒரு பழத்தைப் படுக்கையில் தலைக்கு அடியிலும், மற்றொன்றை வீட்டு பூஜையறையில் வைக்க வேண்டும் அல்லது வெள்ளைத் துணியில் சுற்றி, வீட்டு நிலைப்படியில் கட்டிவிட வேண் டும். இப்படிச் செய்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

மதுரை-மேலூரில் இருந்து, வெள்ளி மலைக்கு அரசு பேருந்து வசதி உள்ளது. அன்பர்கள், ஒருமுறையேனும் வெள்ளிமலை வேலவனைத் தரிசித்து வரம் வாங்கி வரலாம்.

Leave a Reply