shadow

நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர்

1பண நோட்டுகளை மாற்ற மக்கள் அலை மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனது மகளுக்கு 200 கோடிக்கு மேல் செலவழித்து திருமணம் நடத்தும் மனிதர்கள் வசிக்கும் அதே நாட்டில்தான் அந்த மனிதரும் பிறந்தார். பெயர் வ.உ. சிதம்பரம். சுருக்கமாக வ.உ.சி.கப்பல் ஓட்டிய தமிழர் என்றழைக்கப்படுபவர். தூத்தூக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சொந்த ஊர். பாரதியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இருவரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வஉசி மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். மிகச்சிறந்த படிப்பாளி. வக்கீலுக்கு படித்தவர். எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். கடந்த 1890 முதல் 1900-ம் ஆண்டுகளில் நாட்டில் சுதந்திர வேட்கைத் தீவிரமடைந்த காலக்கட்டம். வஉசி, மராட்டிய வீரர் பாலகங்கதாரத் திலகரை குருவாக ஏற்றார். சென்னையில் ஒரு முறை விவேகானந்தரின் சீடர் ராமகிருஷ்ணரை சந்தித்தார் வஉசி. அப்போது ‘நாட்டு சுதந்திரத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ‘ என வஉசியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து 1905-ம் ஆண்டு காங்கிரசில் இணைத்துக் கொண்ட வஉசி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். சுப்ரமணிய பாரதியும் தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல தொழில்களை வஉசி தொடங்கினாலும் சுதேசிக் கப்பல் கம்பெனிதான் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி’ என்பது ஆங்கிலேயருக்கு சொந்தமானது. வஉசி தொடங்கிய கப்பல் நிறுவனத்தின் பெயர் சுதேசிக் கப்பல் கழகம். தொடக்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செயயப்பட வேண்டுமென்பது திட்டம். நிதி திரட்ட 40 ஆயிரம் பங்குகள் வெளியிடப்பட்டது. அதன் முகமதிப்பு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த எவரும் பங்குகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த ஜமீந்தார் பாண்டித்துரை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணம் அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை. பாரதி ‘ இந்தியா’ பத்திரிகையில் நிதி திரட்ட தலையங்கம் எழுதினார். ஆனாலும் குறைந்த அளவே நிதி சேர்ந்திருந்தது.

முதலில் சுதேசிக் கப்பல் கம்பெனி கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்தூக்குடியில் இருந்து கொழும்புக்கு ஓட்டியது. ஆனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கொடுத்த நெருக்கடியில் கப்பலை வாடகைக்கு கொடுத்த நிறுவனம் குத்தகையை ரத்து செய்தது. இது வஉசிக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது. நாடு முழுவதும் சுற்றினார். பங்குகளை விற்று பணத்தை திரட்டும் பணியில் தீவிரமானார். ‘ஒன்று கப்பல் வாங்குவேன் அல்லது கடலிலேயே கரைந்து விடுவேன் ‘ என சூளுரைத்தார். நிதி திரண்டது. தேவையான நிதி சேர்ந்ததும் முதலில் எஸ்.எஸ் காலியோ கப்பலை வாங்கினார். கப்பல் தூத்தூக்குடி வந்தடைந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. காலியோவை தனது முதல் பிள்ளை என்பார் வஉசி. அடுத்து பிரான்சில் இருந்து லாவோ வந்தது.

இரு கப்பல்களும் பிரிட்டன் கப்பல் கம்பெனிக்கு எதிராக தூத்தூக்குடியில் இருந்து கொழும்புவுக்கு ஓடத் தொடங்கின. போட்டி உருவானது. பிரிட்டன் கப்பல் கொழும்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்றது.சுதேசிக் கப்பல் 50 பைசாவுக்கு பயணிகளை அழைத்துச் சென்றது. ஆடிப் போனது பிரிட்டன் கப்பல் கம்பெனி. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கம்பெனி. தேசப்பற்று மிக்க மக்கள் பிரிட்டிஷ் கப்பல்களை புறக்கணித்ததும் இதற்கு ஒரு காரணம்.

தூத்துக்குடியில் மதுரா கோட்சின் கோரல் மில் இயங்கி வந்தது. இந்த மில்லில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து வஉசி போராடினார். சிதம்பரத்துடன் சுப்பிரமணிய சிவாவும் சேர்ந்து கொண்டார். சுப்பிரமணியம் சிவா மீதும் பிரிட்டன் அரசு பல வழக்குகளைப் போட்டிருந்தது. சிதம்பரமும் சிவாவும் ஸ்ட்ரைக்கை முன்னின்று நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் மற்ற ஆங்கிலேய நிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியது. சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கோபமும் சிதம்பரம் மீது ஆங்கில அரசுக்கு இருந்தது.

தூத்துக்குடியில் சிதம்பரமும் சிவாவும் கலகத்தை ஏற்படுத்துவதை அறிந்த ஆங்கிலேயே அரசு சிதம்பரத்தை மடக்க திட்டமிட்டது. திருநெல்வேலிக்கு சிவாவுடன் வருமாறு சிதம்பரத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தைக்கு வந்த சிதம்பரத்திடம் ‘இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது போராட்டங்களில் ஈடுபடக் கூடாது’ என ஆங்கிலேயே அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சிதம்பரம் மறுத்தார். உடனடியாக கைது செய்யப்பட்டார். 1908 மார்ச் 12-ம் தேதி சுப்பிரமணிய சிவாவும் சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்தூக்குடியில் பெரும் கலவரம் வெடித்தது. வழக்கு நேர்மையாக நடைபெறதாத காரணத்தினால் விசாரணையில் பங்கேற்க வஉசி மறுத்துவிட்டார். முடிவில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 20 ஆண்டுத் தண்டனையும் அடங்கியிருந்தது. முதலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் . தண்டனை விதிக்கப்பட்டபோது வஉசிக்கு 36 வயதே ஆகியிருந்தது. பின்னர் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மேல் முறையீட்டுக்கு பிறகு தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

வஉசி சிறைக்கு சென்று விட்டதால், பங்குதாரர்களால் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. கப்பல்களை விற்க முடிவு செய்தனர். விடுதலையாகி வெளியே வந்தபோது, வஉசியை வரவேற்க அவரது ஆத்ம நண்பர் சுப்பிரமணியம் சிவா இன்னும் சிலர் மட்டுமே சிறைக்கு வந்திருந்தார்கள். அவரது முதல் பிள்ளையான எஸ்எஸ் காலியோ யாரை எதிர்த்து கப்பல் ஓட்டினாரோ… அவர்களுக்கே விற்கப்பட்டிருந்தது!.

Leave a Reply