shadow

அப்போது அவர், ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கும், பொதுப் பக்தர்களுக்கான சேவைகளை சிறப்பாகச் செய்ததற்கும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவைப் பாராட்டினார்.

அதன்பிறகு பக்தர்கள் தெரிவித்த குறைகள், கேட்ட கேள்விகளுக்கு ஏ.வி.தர்மாரெட்டி பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதிகாரி அளித்த பதில்களும் வருமாறு:- வாரங்கல், முரளிதர், ஐதராபாத் சீதா:

திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு சரியாக அறைகள் வழங்கப்படுவது இல்லை. அதிகாரி: திருமலையில் குறைந்த தங்குமிடமே உள்ளன.

50 சதவீத அறைகள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன. மீதமுள்ள அறைகள் தற்போதைய முன்பதிவின் கீழ் வைக்கப்படுகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவதால், திருப்பதியில் அறைகள் எடுத்துத் தங்கலாம். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் அறைகளுக்காக இடைத்தரகர்களை அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது.

மதனப்பள்ளி ரெட்டப்பா, ஓங்கோல் வெங்கடேஷ்: ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின்போது சுவையான அன்னப்பிரசாதம் வழங்கியதற்காக தேவஸ்தானத்துக்கு பாராட்டுகள். திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உங்கள் தலைமையில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. திருமலையில் உள்ள நான்கு மாடவீதி கேலரிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும்.

அதிகாரி:பக்தர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க திருமலை முழுவதும் 140 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்களை (ஆர்.ஓ. பிளான்ட்) நிறுவி உள்ளோம். மேலும் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்களுடைய கண்ணாடி, தாமிரம், ஸ்டீல் அல்லது டப்பர்வேர் பாட்டில்களை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். சென்னை, மகேஷ்பாபு: திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், பக்தி சேனல் ஊழியர்கள் உள்பட பலர் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்களுக்கு சிறப்பான சேவையை செய்துள்ளனர். வாகனம் தூக்குபவர்களுக்கும் பாராட்டுகள்.

அதிகாரி:அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணைந்து 79 வாகன தூக்குபவர்களை பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.81,500 வீதம் பணப்பரிசு, ஒரு ஜோடி ஆடையை வழங்கி உள்ளனர்.

கர்னூல், வாசு: தானேயில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பாழடைந்த கோவிலை தத்தெடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முன்வருமா? அதிகாரி:ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் புதிதாக வெங்கடேஸ்வரா கோவில்களை கட்டுவது மட்டுமின்றி, சிதிலமடைந்த பழமையான கோவில்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் புனரமைக்கப்படும். கரீம்நகர், மகேந்திரராவ்: ஸ்ரீவாரி சேவையை ஆன்-லைனில் முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்கள் பணம் கேட்கிறார்கள். அதிகாரி:ஸ்ரீவாரி சேவை முற்றிலும் தன்னார்வ சேவை. ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் யாருக்கும் ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை.

.ஆன்-லைனில் காலியிடங்கள் அல்லது வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சேவைக்கு வாருங்கள். ஊழலை ஊக்குவிக்கவோ அல்லது சேவா முன்பதிவுக்காக இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. கடப்பா, சரஸ்வதி: திருமலையில் 5 கிராம் தங்க டாலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் ஸ்ரீவாரு தங்க டாலர்களை விற்பனை செய்கிறது. விற்பனை எந்த அளவுக்கு நடக்கிறது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்வோம். மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார். மேலும் பல்வேறு பக்தர்கள், தேவஸ்தான இ.தரிசன கவுண்ட்டர்களில் ஒருசில தரிசன டோக்கன்களை மீண்டும் தொடங்க வேண்டும், எனக் கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ரூ.300 டிக்கெட் 25,000 வழங்கப்பட்டு வருகிறது. இ.தரிசன கவுண்ட்டர்களில் மணிக்கணக்கில் காத்திருப்பதற்கு பதிலாக ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யலாம், என அதிகாரி கூறினார்.