shadow

மனம் விட்டுப் பேசலாமே ப்ளீஸ்..!’ – அதிர வைக்கும் தற்கொலை நிலவரம்

1காலை அலுவலகம் செல்வதற்கு அவசர அவசரமாக ஓடிவந்து மின்சார ரயிலைப் பிடித்து, ‘ஏங்க கொஞ்சம் தள்ளி உட்கார முடியுமா?’ எனக் கேட்டு மூன்று பேர் அமரும் இருக்கையில் நான்கு பேராக அட்ஜஸ்ட் செய்தபடி அமர்ந்து, வியர்வையைத் துடைத்தபடி ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அக்கம் பக்கம் இருக்கும் நபர்கள் யார் யார் எனப் பார்க்கும் வழக்கமுண்டு. அரைமணி நேரப்பயணத்தை வேறு எப்படிதான் சுவாரஸ்யமாக்கிக் கொள்ள முடியும்? அப்படியான பயணங்களில் தினமும் யாரேனும் ஒருவராவது சத்தமில்லாமல் அழுதபடியோ அல்லது கண்ணீர் சிந்தியபடியோ உடன் பயணிப்பதை கவனிப்பதுண்டு. அவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குள்ளான பெண்களோ அல்லது 40 வயதிற்கு மேற்பட்டவர்களாகவோ இருப்பார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கில்லை. அவர்கள் ரயிலில் இருந்து இறங்கும் வரை சுற்றி இருக்கும் ஒருவர் கூட அவரிடம் ஏன் அழுகிறீர்கள் என்றோ? அல்லது சிறிது தண்ணீர் கொடுத்தோ ஆசுவாசப்படுத்த எத்தனிப்பதில்லை. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அழுத தடயமே தெரியாமல் தானாகவே கண்ணீரைத் துடைத்தபடி இறங்கி விடுவார்கள். இப்படியான சூழல்களில் துளைக்கும் ஒரே கேள்வி, ‘அவ்வளவுதானா நாம்?’.

நாக்பூரில் உள்ள மத்திய மருத்துவ மையத்தின் கணக்கிடுதல் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2000 வரையிலான மூன்று வருட காலகட்டத்தில் அவர்களிடம் வந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பான உயிர்ப்பலிகளை பற்றிய தரவு ஒப்பீடுதான் அது. அதில் 241 பேர் சக மனிதர்களால் கொலை செய்யப்பட்டவர்கள், 1,127 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். கொலையை விட தற்கொலை என்னும் வன்முறையின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் தன் சொந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டவர்கள்தான் அதிகம்.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நம் சமுதாயத்தில், சொந்த வீட்டிலேயே ஒருவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதை கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில்தான் உறவுகளிடையேயான புரிதல் இருக்கிறதா? இது இப்படியிருக்க, குடும்ப சிக்கல்களால்தான் அதிகம் தற்கொலையே நிகழ்கிறது என்கிறது ஆய்வு முடிவுகள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய முக்கிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட சர்வே-யில் சென்னையில் 650க்கு 419 ஆண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக ஆவணக் காப்பக தரவுகள் சொல்கின்றன. பெண்களில் 193 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது.

என்னென்ன காரணங்கள்?

தற்கொலைக்குத் தூண்டுவதில் குடும்பச் சிக்கல்கள் முக்கியக் காரணமாக இருந்தாலும், உடல்நிலை சரியில்லாமல் போவது, நாட்பட்ட போதை பழக்கம், காதல் தோல்வி, மனநிலை பாதிப்பு மற்றும் வேறு சில காரணங்களும் இதில் அடக்கம். இருப்பினும் மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார், “வெளிநாடுகளில் 3:1 வீதம் நடக்கும் தற்கொலைகள் இங்கே 1:5:1 என்கிற பாலின விகிதாசார எண்ணிக்கையில் இருக்கிறது. தற்கொலை செய்துகொள்பவர்களில் நடத்தப்படும் மனநல போஸ்ட் மார்ட்டத்தில் (psychological autopsy) 50-60% வரை மனநோயால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றால், மீதம் 40% பேர் அந்த நொடியில் எடுக்கும் முடிவினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஓரு லட்சம் மக்களுக்கு 21 பேர் என்கிற எண்ணிக்கையில் மக்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்” என்கிற அதிர்ச்சி தகவலை பகிர்கிறார்.

மனநோய் இருப்பதை எப்படிக் கண்டறிவது?

ஒரு செயல் நாம் எண்ணியபடி நடக்காதபோது இயல்பாகவே எழும் மன அழுத்தம் நாட்பட்ட அளவில் மன நோயாக மாறுகிறது. பத்து பேர் திடீரென வீட்டிற்கு வந்தாலும் சுறுசுறுப்பாக வேலை செய்பவர் சட்டென சோர்ந்து போய் வீட்டின் ஓரத்தில் முடங்கிப் போவது, என்னால் இது முடியவில்லை என தனக்குத் தானே அடிக்கடி கூறிக்கொள்வது, தனிமையில் அழுவது என, மன அழுத்தம் பல மாதிரியாக வெளிப்படும். சிலர் வெளியே சிரித்தபடியே இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் அப்படி ஒன்று நிகழ்ந்ததற்கான தடயமே இருக்காது.

மன அழுத்தம் நாட்பட்ட அளவில் சிலருக்கு மனச்சிதைவாக மாறும், எல்லோரும் தனக்கு எதிராக செயல்படுவது போல அவர்களுக்குத் தோன்றும். இல்லாத யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். எந்நேரமும் யோசனையிலேயே இருப்பார்கள். குற்ற உணர்வு அதிகம் இருக்கும். தூக்கமே வராமல் தவிப்பார்கள் அல்லது தொடர்ந்து மூன்று, நான்கு மணி நேரம் நன்றாகத் தூங்குவார்கள்.

மனநல பாதிப்புள்ளவர்கள், தங்களை கவனித்துக்கொள்ள வேண்டியது எப்படி?

‘எனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கு!’ என்பதை உணர்ந்தால் உடனடியாக மனநல மருத்துவர்களை நாட வேண்டும். அவர்கள் தரும் மருந்துகளை பின்பற்றுவது போதுமான பலனைத் தரும். தன்னை தானே தூக்கி நிறுத்திக் கொள்ள நிறைய முயற்சி செய்ய வேண்டும். தினம் காலையில் தவறாமல் நடை பயிற்சி செய்வது, தூங்கும் நேரத்தை சீராக்கிக் கொள்வது, படம் வரைவது, வீட்டைச் சுத்தம் செய்வது, பக்கத்துக்கு வீட்டில் இருப்பவருடன் பேசுவது என ஏதாவது ஒரு செயலில் தன்னை தினமும் ஈடுபடுத்திக் கொண்டு, சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும்.

அவர்களை நாம் எப்படி கவனித்துக் கொள்வது?

சுற்றி இருப்பவர்கள் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள், யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்? என சலித்துக் கொள்ளாமல், அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பொறுமையும் புரிதலும் இங்கே பாதி தற்கொலைகளை தடுத்து நிறுத்தும். நமக்கு தெரிந்தவரோ தெரியாதவரோ அழுதபடி இருந்தால் நமக்கு ஏன் பிரச்னை என ஒதுங்காமல் தாமாக முன்வந்து அவரிடம் பேச்சு கொடுக்கலாம். நம் குரலை கேட்க யாராவது இருக்கிறார்களே என்கிற ஆறுதல் அவர்களுக்கு கிடைக்கலாம். யாரோ ஒருவர் நம்மிடம் பேசுகிறார்களே என்று சிலர் தயங்கலாம். எதுவாக இருப்பினும், ‘என்னாச்சு?’ என்று கேளுங்கள். ஒன்றுமில்லை என்று மறுப்பார்கள்.

இரண்டாம் முறை கேட்கலாம், தவறில்லை!.

Leave a Reply