shadow

டீன் ஏஜ் பருவம் பிரச்சனைகள் நிறைந்ததா?

ஒவ்வொரு பெண்ணுக்கும், பையன்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளையும் பற்றி பார்க்கலாம்.

பதின்பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம். எது நல்லது, எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத, மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய பருவம். தனக்கு மெச்சூரிட்டி வந்துவிட்டது, தனக்கு எல்லாம் தெரியும், யாரும் தனக்கு அட்வைஸ் செய்யத் தேவையில்லை என்று, டீன் ஏஜ் இளசுகள் வாதம் செய்யும் பருவமும்கூட.

பதின்பருவத்தில் தவறு என உணராமல் டீன் ஏஜ் இளசுகள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளையும் பற்றி பார்க்கலாம்.

டீன் ஏஜ் இளசுகள் அன்றாடம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள், ஸ்ட்ரெஸ், டென்ஷன், டிப்ரஷன், தூக்கமின்மை. அன்றாடம் நடைப்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, பிடித்த வெல்விஷரிடம் பேசுவது, இயற்கை காட்சிகளை ரசிப்பது, வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, மன அழுத்தம் குறைக்கும் பாடல்களைக் கேட்பது போன்ற செயல்பாடுகளைச் செய்வது அவர்களின் மன இறுக்கத்தைக் குறைத்து நல்ல பலன் கொடுக்கும்.

நேரம் காலம் போவதே தெரியாமல் செல்போனில் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இருப்பது, இன்டர்நெட்டில் அதிக நேரத்தை செலவிடுவதை பருவ வயதினர் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபரை நண்பராக ஏற்றுக்கொண்டு அவரிடம் தன் பெர்சனல் விஷயங்களை பகிர்தல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தன் அழகை வர்ணிக்கும் எதிர்பாலினத்தவரிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக்கொள்ள நினைப்பது, நல்ல நண்பர், போலியான நண்பரை அடையாளம் காண முடியாமல் அனைவரிடமும் எதார்த்தமாகப் பழகுவது இவையெல்லாம் இந்த வயதுக்குப் பாதுகாப்பற்ற செயல்கள்.

பதின் பருவ பெண்கள், ஆண்களால் நேரடியாகவோ அல்லது போன் வாயிலாகவோ பல பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் அச்சப்பட்டு தனக்குள்ளேயே பிரச்னையை வைத்துக்கொள்ளவோ, தானே சிக்கலைத் தீர்க்கவோ நினைக்கக் கூடாது. பெற்றோர் அல்லது நலன் விரும்பிகளிடம் அதுபற்றிப் பகிர்ந்து தீர்வு காண வேண்டும்.

அறிவுரை சொல்பவரைக் கண்டாலே கோபப்படுவது, தனிமையை விரும்புவது, கூட்டத்தைத் தவிர்க்க நினைப்பது, நம்மால் முடியுமா என்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, தயக்கம்… இதுபோன்ற டீன் ஏஜ் சிக்கல்களைத் தீர்க்க, விளையாட்டு நல்ல பலன் கொடுக்கும். மேலும் தனக்கான எதிர்கால லட்சியங்களை தீர்க்கமாக முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதால், மேற்கண்ட சிக்கல்கள் ஏற்படாலும், தோன்றாமலும் தடுக்க முடியும்.

Leave a Reply